பேருந்து நிலையம்

 

திருநெல்வேலி சேர்ந்த ராயன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு, 'திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க கடந்த 2018 ஆம் ஆண்டில் 79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. ஆனால் கடந்த 2023 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்கு உரிய தடையில்லா சான்றிதழ் பெறவில்லை எனவும், பேருந்து நிலையத்தில் கீழ்தளம், தரைத்தளம் என மூன்று தளங்களாக கட்டப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து தண்ணீர் எளிதாக வெளியே செல்வதற்கு கட்டமைப்பு இருக்க வேண்டும். ஆனால் ஒரு சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பேருந்து நிலையம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. மேலும் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

 

தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

 

பேருந்து நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட மணல், கனிமங்கள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணையானது நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அவசர அவசரமாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், நகரமைப்பு பிரிவின் அனுமதியோ அல்லது தடையில்லா சான்றிதழ் பெறாமல் பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. எனவே முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும். மேலும் தரமற்ற பேருந்து நிலையம் கட்டிய ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதற்கு அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.