நாட்டாமை, சேரன் பாண்டியன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து சினிமா துறையில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் சரத்குமார். மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றவர். இப்படி சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த சரத்குமார், 1996 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அப்போது திமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். பின் 1998 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அதில் வெற்றிக்கனியை பறிக்கவில்லை நடிகர் சரத்குமார். சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தாலும், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
2006 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 2006 ஆம் ஆண்டு தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட போதிலும் அதிமுக தோவ்வியை தழுவியது. திமுக மற்றும் அதிமுகவில் அரசியல் பயணம் செய்த நடிகர் சரத்குமார் 2007ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை என்ற தனி கட்சியை தொடங்கினார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தென்காசி தொகுதியில் சரத்குமாரும், நாங்குநேரி தொகுதியில் எர்ணாவூர் நாராயணனும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
நன்றாக சென்ற கூட்டணியில் திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக எர்ணாவூர் நாராயணன் அறிவித்தார். பின் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதில் சரத்குமார் தோல்வியை தழுவினார். அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளித்தார். பின் 2021 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இருந்து விலகி மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.
இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சி தரப்பிலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் சமத்துவ மக்கள் கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கும் என்ற கேள்வி இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுடன், தனது சமத்துவ மக்கள் கட்சியை இணைத்துள்ளார் நடிகர் சரத்குமார். இது அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இது குறித்து பேசிய சரத்குமார், “ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது யாருடன் கூட்டணி? எத்தனை இடங்கள் நிற்க போகிறீர்கள்? என்ற கேள்வி எழும். இது என்னை இரவு நேரத்தில் மனதை தாக்கியது. நம்முடைய இயக்கம் ஆரம்பித்தோம். ஆனால் கூட்டணி, எத்தனை சீட் என்பதுதான் கேள்வியாக உள்ளது.மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற கொள்கை அடிபட்டு போகிறது. நாட்டின் வளர்ச்சி மற்றும் வருங்கால இளைஞர்களின் நலனுக்காக கட்சி இணைப்பு நடைபெற்றுள்ளது. இது ஒரு எழுச்சியின் தொடக்கம். ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்த மோடி நாட்டின் பிரதமரானதை நினைத்து பார்க்க வேண்டும். நமது இயக்கம் தொடர்ந்து தொடர்ந்து தேர்தலை சந்தித்து கொண்டிருப்பதற்கு பதிலாக நம்முடைய சக்தியை மற்றொரு சக்தியுடன் இணைந்து செயல்பட்டால் என்ன என்று தோன்றியது” என தெரிவித்துள்ளார்.