மதுரையில் 2 மணி நேரம் பெய்த கனமழை - சாலைகளில் தேங்கிய நீரில் சிக்கி தவித்த வாகனங்கள் - வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க தவித்த வாகனங்கள் - பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு - பல மணி நேரமாக மின்சாரமின்றி இருளில் மூழ்கிய பகுதிகள் - தவித்த மக்கள்.

மதுரையில் பெய்த கனமழை
 
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாலை முதல் இரவு 7 மணி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. அதன்படி மதுரை மாநகர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , அண்ணா பேருந்துநிலையம், சிம்மக்கல், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி , ரயில்வே நிலையம், காமராஜர்சாலை, டிஆர்ஓ காலனி, தல்லாகுளம், அண்ணாநகர், ஆனையூர், முனிச்சாலை, தெற்குவாசல், கடச்சனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழையானது தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, ஓபுளா படித்துறை பகுதி, காமராஜர் சாலை, தெப்பக்குளம் சாலை ரயில்வே நிலைய சாலை, சிம்மக்கல் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் முழுவதும் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கிநின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கனமழை காரணமாக மதுரை ஆழ்வார்புரம் வைகையாற்று சாலையில் மழைநீர் தேங்கியால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் மழைநீரில் சிக்கித் தவித்தன. 
 
அலுவலகத்தில் புகுந்த மழைநீர்
 
மழை நீர் இடுப்பளவிற்கு தேங்கியதால் கார், பைக் ஆகிய வாகனங்கள் மழைநீரில் சிக்கி பழுதடைந்தன. ஆரப்பாளையம் மஞ்சள்மேட்டு தெரு பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வீடுகளுக்குள் வைத்த பொருட்கள் மழைநீரில்  மூழ்கியது. இதனிடையே மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மழைநீர் சூழ்ந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுடைய வாகனங்கள் மழை நீரில் பாதியளவிற்கு மூழ்கியபடி கடந்துசென்றது. மேலும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் உள்ள தரைதளத்தில் மழை நீர் புகுந்து சில அலுவலகங்களுக்குள் மழை நீர் சென்றது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரமாக இருளில் மூழ்கியது. மேலும் கட்டடங்களில் சில இடங்களில் மழை நீர் கசிவு ஏற்பட்ட நிலையில் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை வைத்து மழை நீரை பிடித்தனர். கனமழை காரணமாக மதுரை மாநகரின் பிரதான சாலையான அரசு மருத்துவமனை சாலை கோரிப்பாளையம், தல்லாகுளம் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை ,சிம்மக்கல் சாலை தெப்பக்குளம் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதன் காரணமாக பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி முடிந்து வீடுகளுக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் பேருந்து நிலையங்களிலே நீண்ட நேரமாக காத்திருந்தனர்.
 
போக்குவரத்து நெரிசல்
 
இதனிடையே மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் டிஆர்ஓ காலனி, ரிசர்வ்லைன் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து இரவு நீண்ட நேரத்திற்கு பிறகு மின்சார விநியோகம் மீண்டும் தொடங்கியது. இதனால் சில மணி நேரங்களாக மின்சாரம் இன்றி குடியிருப்பு வாசிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். மதுரை மாநகரில் 2 மணி நேரமாக பெய்த கனமழை காரணமாக புதூர் சூர்யா நகர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டு விடப்பட்ட பள்ளங்களில் பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சிக்கி தவித்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் நீண்ட நேரமாக ஏற்பட்டது.