ஸ்மார்ட் போன் கடன் செயலிகளுக்கு விதிமுறைகளை உருவாக்க கோரிய வழக்கு குறித்து ரிசர்வ் வங்கி செயலாளர், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், மத்திய நிதி மற்றும் செலவீனத்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "பிரதமர் கூறியது போல் தற்போது நாம் டிஜிட்டல் இந்தியாவின் நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ரிசர்வ் வங்கி தற்போது வங்கிகள் அல்லாத நிறுவனங்களும், பொதுமக்களுக்கு கடன் வழங்கலாம் என தெரிவித்துள்ளது.
வங்கிகளில் முன்பு கடன் பெற வேண்டும் என்றால் வங்கிக்கு சென்று விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து, ஆவணங்கள் சமர்ப்பித்து வங்கிக்கு நேரடியாக சென்று பலமுறை அலைந்து கடன் பெற வேண்டும். ஆனால் தற்போது நமது ஸ்மார்ட் போன் மூலமாக விரைவாக கடன் பெற முடிகிறது.
தற்போது பல்வேறு பணம் இருக்கும் நிறுவனங்கள் ஸ்மார்ட் போன் செயலி உருவாக்கி அதன் மூலம் கடன் வழங்கி வருகின்றனர். ஸ்மார்ட்போன் செயலிகள் மூலம் கடன் வழங்குவதை நம்பி பலர் தங்களது பணம், சொத்து ஆகியவற்றை இழக்கின்றனர்.
இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள், பொருளாதார நெருக்கடியில் உள்ளவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் போன்றவர்களை குறி வைத்து இது போன்ற கடன் செயலி மோசடி நடைபெறுகிறது. O% வட்டி என்ற அறிவிப்புகளை வெளியிட்டு வங்கிகள் போன்றே தனது இணையதள பக்கங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபடுகின்றனர்.
போலியான ஸ்மார்ட் போன் கடன் செயலிகளை உருவாக்கி அதிக வட்டி, தேவை இல்லாத விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் விதித்து ஸ்மார்ட் போன் செயலி மூலம் கடன் பெறுபவரின் மொபைலில் உள்ள தொடர்புகள் பட்டியல் (Contact List) புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்கின்றனர்.
இதை வைத்து தவறுதலாக பயன்படுத்தி கடன் பெறுபவர்களை அச்சுறுத்துகின்றனர். கடன் பெரும் தொகையை விட பல மடங்கு அதிகமான தொகையை வசூல் செய்கின்றனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதக் கின்றனர். இந்தியா முழுவதும் இது போன்ற நிதி குற்றம் அதிகமாகிறது.
கடன் செயலிகளான Kissht, KreditBee, Paytm, Stashfin, One Card, Early Salary, Slice, Zest Money, Cashe Personal Loan App, Money View போன்ற கடன் தரும் செய்திகள் கூகுள் ஆப் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
கடன் செயலிகள் மூலம் கடன் பெறுபவர்களின் தொடர்பு எண்கள், புகைப்படங்களை மொபைலிருந்து திருடி புகைப்படங்களை ஆபாசமாக மாப்பிங் செய்து கடன் பெற்றவரின் தொடர்பு எண்களுக்கு அனுப்புகின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது மிகத் தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இதனை தடுக்க கடன் செயிகளுக்கு பதிவு எண் வழங்கவும், விதிமுறைகளை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, கடன் செயலிகளை அனுமதிக்கும் போது அதற்கு சில விதிமுறைகள் உருவாக்கவும், பதிவு எண்கள் வழங்கவும் உத்திரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், மத்திய நிதி மற்றும் செலவீனத்துறை செயலர், ரிசர்வ் வங்கி செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்
மற்றொரு வழக்கு
தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு பகல் நேரங்களில் ரயில்களை இயக்க கோரிய வழக்கில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த மனுவின் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்த ஜீவாகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்துள்ளார். அதில், "தமிழகத்தின் 11வது பெரிய நகரமாகவும், அதிக மக்கள் வாழும் பகுதியாகவும் தஞ்சாவூர் உள்ளது. தென்னிந்தியாவின் சிறப்புமிக்க கலை மற்றும் கட்டிடக்கலையின் ஆதாரமாக தஞ்சாவூர் உள்ளது. மேலும் இங்கு சோழர்கள் கட்டிய பழமையான கோயில்கள், பிரசித்தி பெற்ற மசூதிகள், தேவாலயங்களும் உள்ளது.
தமிழகத்தின் முக்கியத்துவம் கொண்ட சுற்றுலாத்தலமாக தஞ்சாவூர் திகழ்ந்து வருகிறது.
மேலும் தமிழகத்தின் டெல்டா தலைநகரமாகவும், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறும் பகுதியாகவும், பட்டுத்துணி தயாரிக்கும் தொழிலில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
5 பல்கலைக்கழகங்களும், 15 கல்லூரிகளும் தஞ்சாவூரில் உள்ள நிலையில் அதிகளவில் மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இரவு நேரங்களில் மட்டுமே சென்னைக்கு ரயில் போக்குவரத்து உள்ளது. தஞ்சாவூருக்கு ரயில் போக்குவரத்து முறையாக இல்லாததால் வணிகர்கள், மாணவர்கள், விவசாயிகள் பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது.
இரவு நேரத்தில் சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர்.பகல் நேரங்களில் ரயில் இயக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தம் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு பகல் நேரங்களில் ரயில்களை இயக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மனுதாரர் 2014இல் ரயில் இயக்க கோரி மனு அளித்துள்ளார். தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அழிக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பி மனுவின் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 6 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.