தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் 152 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டி வரை சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பிரதானமாக நெல், வாழை, தென்னை, மருத்துவ குணங்கள் அடங்கிய கருப்பு பன்னீர் திராட்சை என விவசாயம் சார்ந்த பகுதியாகும்.



இதில், முக்கிய பங்காக நெல் விவசாயம் இரண்டு போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக  கேரள மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளான முல்லைப்பெரியாறு அணை, தேக்கடி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.



தற்போது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை கடந்ததால் இடுக்கி மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணை தற்போதைய நிலவரப்படி 136.25 அடியாக உயர்ந்துள்ளது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2274 கன அடி வீதம் இருந்து வருகிறது. தமிழகப் பகுதிக்கு 511 கன அடி நீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது . நீர் இருப்பு 6181 மில்லியன் கனஅடியாக உள்ளது.



அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்ததால் இடுக்கி மாவட்டம் வல்லகடவு, வண்டிப்பெரியாறு, உப்பு தாரா, சப்பாத்தி உள்ளிட்ட பெரியாற்றின் கரையோரத்தில் வசிப்பவர்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளனர். அணையின் ரூல்கர் விதிமுறைப்படி இன்று வரை நவம்பர் 10. 139.5 அடியாகவும், நவம்பர் 30 வரை 142 அடியாகவும் தேக்கலாம். வடகிழக்கு பருவமழை நீர் பிடிப்பு பகுதிகளில் தீவிரமடைய வாய்ப்புள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கேரள பகுதிக்கு வீணாகும் தண்ணீர் வெளியேற்றப்படுவதை தடுக்க தமிழக பகுதிக்கு தற்போது கூடுதலாக தண்ணீர் திறக்க தமிழக விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர