குற்றால அருவிகளுக்கு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் சுலபமாக செல்வதற்கு போதுமான வசதி ஏற்படுத்தக் கோரிய வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் சுலபமாக சென்றடையும் வகையில் மாற்றுத் திறனாளிகள் கையாளும் வகையில் சுற்றுலா வழிகாட்டி புத்தகமும் வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்நத வழக்கறிஞர் கே.ஆர்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.
அதில், "தமிழகத்தில் அனைத்து சுற்றுலா இடங்களுக்கும், குறிப்பாக குற்றால அருவிகளுக்கு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் சுலபமாக செல்வதற்கு போதுமான வசதி ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில்,
* தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
* சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் மெரீனா கடற்கரையின் அழகை அருகே சென்று ரசிக்கவும், உணரவும் கடற்கரையில் நிரந்தர சாய்வு பாதை வசதி ஏற்படுத்தப்பட்டது.
* மாற்றுத் திறனாளிகளிடம் எந்தபாகுபாடும் பார்ப்பதில்லை.
* அனைத்து சுற்றுலா இடங்களையும் மாற்றத்திறனாளிகள் சுலபமாக செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,
* கேரளா முழுவதும் உள்ள சுற்றுலா இடங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் சுலபமாக செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
* தமிழக அரசு நிபுணர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் கருத்துகள் கேட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சுலபமாக செல்வதற்கு தேவையான வழிமுறைகளை வகுக்க வேண்டும்.
* அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் சுலபமாக சென்றடையும் வகையில் மாற்றுத் திறனாளிகள் கையாளும் வகையில் சுற்றுலா வழிகாட்டி புத்தகமும் வெளியிட வேண்டும். என உத்தரவில் கூறியுள்ளனர்.