மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், நெடுஞ்சாலை ஓரங்களில் சட்ட விரோதமாக குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் உரிய முறையில் குப்பைகளை அகற்ற ஏற்பாடுகள் இல்லாத நிலையில், குப்பைகளை நெடுஞ்சாலைகளில் கொட்டும் அவல நிலை நீடித்து வருகிறது. 

 





மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஒத்தக்கடை சந்திப்பு, வளர்நகர், உத்தங்குடி , உயர்நீதிமன்ற மதுரை கிளை, வேளாண் கல்லூரி, பத்திரப் பதிவு அலுவலகம், யானை மலை அமைந்துள்ள நெடுஞ்சாலை ஓரங்களில் டன் கணக்கில் கார் கம்பெனிகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் ஆயில் டப்பாக்கள், தெர்மாகோல் அட்டைகள், நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள உணவகங்களில் உள்ள குப்பைகள், இறைச்சி கழிவுகள் மற்றும் பேட்டரி கழிவுகள், கட்டுமானக் கழிவுகள் என டன் கணக்கிலான குப்பைகள் கருப்பாயூரணி பகுதி தொடங்கி ஒத்தக்கடை சந்திப்பு வரை குவித்து வைக்கப்பட்டுள்ளன.



மேலும் குவித்துவைக்கப்பட்டுள்ள குப்பைகளை எரிப்பதால் சாலையோரம் முழுவதும் புகைமூட்டம் விண்ணை முட்டும் வகையில் மேல் எழும்பி வருகிறது. அத்தோடு, குப்பையில் எரியும் நெருப்பு ஜ்வாலைகள் சாலைகளில் பறந்து செல்கின்றன.

 

மேலும் சாலையோரங்களில் மனிதக் கழிவுகளோடு, இறைச்சிகள், உணவுக் கழிவுகளை கொட்டுவதால் தேசிய நெடுஞ்சாலை பகுதி முழுவதிலும் கடுமையான துர்நாற்றம் வீசுகின்றது. ஒத்தக்கடை பகுதியில் உள்ள கண்மாய் அருகிலேயே இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் கண்மாய் நீர் பாழடையும் நிலை உள்ளது.



 

உள்ளாட்சி அமைப்புகள் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்காத நிலையில் நெடுஞ்சாலைகள் குப்பை மேடுகளாக மாறும் அவலத்தைத் தடுப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

உங்கள் பகுதிகளிலும் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளனவா?


ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் எழுதி அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம். வெளியே பெயர் கூற விரும்பாத புகார்தாரரின் விவரங்கள் பொதுவெளியில் பகிரப்படாது.