வைகை ஆறு மாசுபடுவதை கட்டுப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு  நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளது.

 

மாசுபடும் வைகை ஆறு

 

வைகை ஆறு மாசுபடுவது குறித்தும் வைகையில் கழிவு நீர் கலப்பது குப்பைகள் கொட்டுவது குறித்தும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தாமாக முன்வந்து  வழக்கு பதிவு செய்து கடந்த ஆண்டு முதல் விசாரணை செய்து வருகிறது. வைகை ஆறு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக சென்று கடலில் கலக்கிறது. சுமார் 295 கிலோ மீட்டர் பயணிக்கும் வைகை ஆற்றங்கரையில் தேனி, மதுரை, ராமநாதபுரம் பகுதியில் கழிவுநீர் கலக்கிறது. மழைநீர் வடிகால் அனைத்தும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டன. வைகை ஆற்றின் நீர் அசுத்தம் அடைந்து இருப்பதும் ஆய்வில் உறுதியாகியுள்ளது. வைகை ஆற்றின் நிலையை கருத்தில் கொண்டு தேனி முதல் ராமநாதபுரம் வரை பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் சிறப்பு குழு அமைத்து, நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நீதிமன்றம் முன் வந்து விசாரணை செய்து வந்தது.

 

மாசு கட்டுப்பாட்டு வாரியம் வைகை அணையை பாதுகாக்க தவறுகின்றது

 

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வைகை அணையை பாதுகாக்க தவறுகின்றது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில் ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை கண்டறிந்து அபராதம் விதித்திருக்க வேண்டும். அப்படி அபராதம் விதித்திருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அவர்களது நிதியையோ அல்லது ஆற்றில் கழிவு நீர் கலக்கும் நபர்களிடமிருந்து அபராதத்தையோ வசூல் செய்து கட்டி இருப்பார்கள். மாசு கட்டுப்பாட்டு வாரியம் அபராதம் விதித்திருந்தால் தற்போதைய நிலை வந்திருக்காது. பொதுப்பணித்துறையினர் ஆறுகளில் மண் அள்ளுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றார்கள். ஆறுகளை பாதுகாக்கவோ கண்காணிக்கவோ தேவையான எந்த நடவடிக்கையையும் பொதுப்பணித்துறை செய்வதில்லை.

 



நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.



 

இந்த வழக்கு குறித்து 5 மாவட்டத்தை சேர்ந்த அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் தனித்தனியே தற்போதைய நிலை குறித்தும் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பது குறித்தும் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். நீர்நிலை  மக்களுக்கான சொத்து. இதில் அரசியல் பார்க்க வேண்டாம். வைகை ஆற்றை பாதுகாக்க மாநில அரசு திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் ஏன் கொடுக்கவில்லை. அவ்வாறு திட்ட அறிக்கை கொடுத்திருந்தால் அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட தயாராக உள்ளது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.