மனைவியின் தகப்பனாரிடம் (மாமனாரிடம்) இருந்து குழந்தையை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க கோரி தந்தை தொடர்ந்த வழக்கில், மகனை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை திணேஷ்குமார் சார்பில் அவரது தந்தை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு. அதில், "தினேஷ் குமாருக்கும் , அபிநயாவுக்கும் கடந்த 10.02.2016 அன்று திருமணம் நடந்தது. அவர்களுக்கு 5 வயதுடைய ஹர்ஷித் குமார் என்ற மகன் உள்ளார்.
தினேஷ்குமார், அபுதாபியில் தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார்.திருமணத்திற்குப் பிறகு தினேஷ் குமாரும், அவரது மனைவி அபிநயாவும் அபுதாபி சென்று வசித்தனர். மனைவி அபிநயா, உளவியல் பிரச்சினயால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்த தகவல் மனைவியின் பெற்றோருக்கும் நன்றாகத் தெரியும்.
இந்த நிலையில், கடந்த 07.06.2022 அன்று அபிநயா அபுதாபியில் வீட்டில் தனியாக இருக்கும் போது கதவை மூடிவிட்டுத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தினேஷ் குமார் வேலைக்கு சென்று விட்டார். குழந்தை பள்ளிக்கு சென்று விட்டது. தினேஷ் குமாரும், குழந்தையும் மாலையில் வீடு திரும்பியபோது வீடு உள்ளே பூட்டப்பட்டு இருந்தது. வெகுநேரமாகியும் திறக்கவில்லை. அபுதாபி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.உடற்கூராய்வு சோதனையிலும் உடலில் காயங்கள் இல்லை என வந்துள்ளது.
மனுதாரரும் தினேஷ் குமாரும், குழந்தையும் மனைவி பிரேதத்துடன், இந்தியாவில் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர். தினேஷ் குமார் அவரது மகனுடன் திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தார். அப்போது, மனைவி அபிநயாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் தினேஷ்குமாரை தாக்கி அவரது மகன் மற்றும் மகனின் பாஸ்போர்ட்டை பறித்து சென்றனர். எனவே, குழந்தை ஹர்சித்குமாரை தந்தை தினேஷ்குமாரிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், 5 வயது மகனை தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.
மற்றொரு வழக்கு
அரசு அலுவலகங்கள் கட்டப்படும் பொழுது பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் நிலையில் இருக்க வேண்டும் - நீதிபதிகள் கருத்து
தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி பத்திர பதிவு அலுவலகத்தை தனியார் உள்நோக்கத்துடன் நன்கொடையாக வழங்கிய இடத்தில் காட்டுப்பகுதிக்குள் கட்டப்பட்ட கட்டிடத்தில் அமைக்க தடை விதிக்கவும், நகரின் மையப் பகுதிக்குள் அமைக்க கோரிய வழக்கு குறித்து பத்திர பதிவுத்துறை தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த குணசீலன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு.
அதில், "தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலூகா, உடன்குடி கிராமத்தில் பத்திர பதிவு துறை அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. தமிழக அரசு சார்பில் உடன்குடி அனல் மின் நிலைய கட்டிடப் பணி 2007ல் ஆரம்பித்து பல்வேறு காரணங்களால் தாமதப்பட்டு கடந்த ஜனவரி 2018ல் கட்டிடப் பணிகள் ஆரம்பமாகி உள்ளன. தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினர் ராக்கெட் ஏவு தளமும் கட்டப்பட்டு வருகிறது. இந்த இரு திட்டங்களுக்காக உடன்குடி பகுதியில் சுமார் 3,000 ஏக்கர்க்கு மேல் நிலங்கள் கையகப்படுத்தப் பட்டு உள்ளது.
இதனை அறிந்த புகழேந்தி என்பவர் உடன்குடி அனல் மின் நிலையம் அருகே, உடன்குடி நகரில் இருந்து சுமார் 4 கீ.மி வெளியே 2013ம் ஆண்டு ஜோதி நகர் என்ற பெயரில் அரசு அனுமதி பெற்று வீட்டுமனை செய்ய ஆரம்பித்தார். அங்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறாததால் அருகில் அவரது மனைவி சசிகலா பெயரில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் உடன்குடி பத்திர பதிவு அலுவலகத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட சுமார் 20 சென்ட் நிலம் நன்கொடையாக அளித்துள்ளார். இந்த இடம் உடன்குடி நகரின் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கீ.மி நகருக்கு வெளியே உள்ளது.
உடன்குடி பேருந்து நிலையத்தின் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகவளாகத்தில் சுமார் 3 ஏக்கர்க்கு மேல் காலி இடம் உள்ளது.பத்திர பதிவு துறையினர் உடன்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள இடத்தில் பத்திர பதிவு அலுவலகத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டாமல், மேற்படி தனியார் நன்கொடையாக அளித்த இடத்தில் நிரந்தர கட்டிடம் கட்டுவதாக அறிவித்தனர்.
இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி அங்கு கட்டிடம் கட்டும் பணி ஆரம்பித்து தற்போது முடிவடையும் சூழலில் உள்ளது. மேற்படி புகழேந்தி தனது இடத்தில் பத்திர பதிவு அலுவலகத்திற்கு தேவையான எழுத்தர், ஜெராக்ஸ் கடைகள், விலைக்கு மற்றும் வாடகைக்கு விட கட்டி வருகிறார்.
பத்திர பதிவு துறை அதிகாரிகள் தனி நபர் ஆதாயத்திற்காக மேற்படி நன்கொடையாக பெறப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்டி உள்ளனர். எனவே, தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி பத்திர பதிவு அலுவலகம் காட்டுப்பகுதியில் கட்டப்பட்ட கட்டிடத்தில் அமைக்க தடை விதிக்கவும், நகரின் மையப் பகுதிக்குள் அமைக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், அரசு அலுவலகங்கள் கட்டப்படும் பொழுது பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் நிலையில் இருக்க வேண்டும். அரசு அலுவலகங்கள் கட்டப்படும் பொழுது நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என கருத்து தெரிவித்து.வழக்கு குறித்து பத்திர பதிவுத்துறை தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.