காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க தமிழக அரசு தானே உத்தரவு பிறப்பித்தது அதனை நிறைவேற்றுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை என கேள்வி எழுப்பிய, வழக்கில் உரிய இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.



தமிழக அரசின் உத்தரவுபடி காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க உத்தரவிட கோரி மனு தாக்கல்.

 


மதுரை ஆஸ்டின்பட்டி   காவலர் செந்தில் குமார், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழக காவல் துறையில் அதிக பணிச்சுமை இருப்பதாகவும், ஓய்வின்றி பணியாற்ற வேண்டி உள்ளதாகவும் காவலர்கள் தரப்பில் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது. பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களது குறைகளை தீர்க்கும் வகையில் காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ளவர்களுக்கு, வார விடுமுறை வழங்க வேண்டும் என கடந்த 2021 ஆம் ஆண்டு  அரசாணை, பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணை  நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள வர்களுக்கு, வார விடுமுறை வழங்க வேண்டும் என கடந்த 2021 ஆம் ஆண்டு  பிறப்பித்த அரசாணையை நடைமுறை படுத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

 

நீதிபதி

 

இந்த மனு நீதிபதி பட்டுதேவானந்த், முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "மனுதாரருக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. போதுமான அளவு காவல்துறையினர் இல்லாததால், இந்த அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்த இயலவில்லை" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "இந்த நடைமுறை சிக்கலை அரசாணையை பிறப்பிப்பதற்கு முன்பாக யோசித்திருக்க வேண்டும்.  முதல்வர் பிறப்பித்த அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்துவதில் என்ன பிரச்சனை? இதனால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள்.  

 

நீதிமன்ற அவமதிப்பு தொடரலாம்

 

தலைமை காவலர்கள், காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் நலனுக்காக இந்த உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும்.  காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க தவறினால் காவலர்கள் நேரடியாக நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற அவமதிப்பு தொடரலாம் என கருத்துகளை தெரிவித்த நீதிபதி வார விடுப்பு வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என குறிப்பிட்டு வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.