”இன்னும் கொஞ்சம் சாதம் கொடுங்க” - என்று கேட்டு வாங்க வைக்கும் மணப்பட்டி ரசம் இன்றே செஞ்சு பாருங்க.
மணப்பட்டி சமையல்
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ளது மணப்பட்டி கிராமம். இந்த கிராமம் மற்றும் இதனை சுற்றியுள்ள கச்சிராயன்பட்டி, கல்லம்பட்டி, புரண்டிப்பட்டி உள்ளிட்ட கிராமத்தினர் பலரும் மணப்பட்டி சமையலுக்கு பேமஸானவர்கள். இவர்களது கை பக்குவம் அசைவ உணவுகளுக்கு அடிச்சுக்க முடியாது. குறிப்பா, இவங்க தயார் செய்யும் மட்டன் எண்ணெய் சுக்கா, மட்டன் கறிக்குழம்பு, குடல் கூட்டு, ரசம் உள்ளிட்டவை தாருமாறு.
மணப்பட்டி ரசம்
இலையில் ஊத்திய ரசம் ஆறு மாதிரி ஓடுவதை சாதத்தை வைத்து அணை கட்டி, குழைச்சு சாப்பிடுவது ரசனை. கறிக்குழம்பிற்கு பின் ரசம் குடிச்சால் தான் ஒரு நிம்மதி என்று நினைப்பவர்கள் பலர். சிலர் ரசம் தான் எனக்கு மெயினே என்பார்கள். இப்படி ரசத்திற்கு ரசிகர் கூட்டம் ஏராளம். அப்படி சுவையான ரசம் வகையில் ஒன்று தான் மேலூர் மணப்பட்டி ரசம். இது ஒரு நான் வெஜ் ரசம். சாப்பிடும் போது வெஜ் ரசம் மாதிரி தெரிந்தாலும், இதில் மட்டன் எழுப்புச் சாறு கலப்பது தான் தனி சுவையே. மணக்க வைக்கும் மணப்பட்டி ரசம் எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மிளகு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
பூண்டு - 20 பல்
எலுமிச்சை - பாதி பழம் (1/2)
புளி - (எலுமிச்சை அளவு)
மட்டன் சாறு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
கடலை எண்ணெய் - 2 டீ ஸ்பூன்
வரமிளகு - 2
கொத்த மல்லி - 1 கைப்பிடி
கருவேப்பிலை - (1/2) அறை கைப்பிடி அளவு
தக்காளி - 2 (பெரிய அளவு)
துவரம் பரும்பு - 50 கிராம்
மணப்பட்டி ரசம் செய்முறை ;- அடுப்பை சிம்மிம் வைத்துக் கொண்டு, கடாயில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வரமிளகாய் போட்டு., கடுகு வெடித்தவுடன் கருவேப்பிலை, மஞ்சள் தூள் போட வேண்டும். மஞ்சள் தூள் கருகும் முன் ரச தண்ணீரை ஊற்ற வேண்டும். (ரச தண்ணீர் செய்முறை - 2 தக்காளி மற்றும் கொத்தமல்லி போட்டு கையால் பிசைய வேண்டும். அதில் புளி தண்ணீரை சேர்த்த பிறகு ரசத்திற்கு தேவையான தண்ணீர் கலந்துகொள்ள வேண்டும் ). ரச தண்ணீர் சேர்த்த பின் 10 நிமிடம் அடுப்பை தொடர்ந்து சிம்மில் வைக்க வேண்டும். அப்போது ரசம் முறைகட்டி வரும். ரசம் கொதிப்பதற்கு முன் இறக்கவிட வேண்டும். ரசத்தை இறக்கிய உடன் வேக வைத்த துவரம் பருப்பு மற்றும் வேக வைத்த மட்டன் சாறையும் சேர்க்க வேண்டும். கடைசியாக ஒரு துண்டு வெல்லம் மற்றும் விதை நீக்கிய அறை எலுமிச்சை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது நமக்கு கமகம, சுவையான மணப்பட்டி ரசம் தயாராகிவிடும். ( ரசத்தில் சேர்க்கும் மட்டன் சாறு செய்முறை கீழே உள்ளது)
மட்டன் சாறு செய்முறை
மட்டன் எலும்பு -100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 கால் டீ ஸ்பூன்
புதினா - தேவையான அளவு
குக்கரில் இந்த நான்கு பொருட்களையும் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, 4 விசில் விட்டு இறக்கினால் மட்டன் சாறு கிடைத்துவிடும். இதில் கிடைக்கும் சாறை மட்டும் எடுத்து ரசத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.