கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தூத்துக்குடியைச் சேர்ந்த பகவதி ஆதித்தன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்செந்தூர் காயாமொழி கிராமம் அருள்மிகு ஒப்பிடாதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு வருவதாகவும், அதனை தடுக்க உத்தரவிட வேண்டும்." மனு தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவது தொடர்பாக பிரச்சனை எழுந்த நிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில், மேல்நிலை நீர்த்தக்க தொட்டிகான கட்டுமான பணிகள் நிறுத்தாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், கோவிலுக்கு செல்லும் சாலை முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டது.

 

அரசு தரப்பில்,

 

* அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்திலேயே மேல் நிலையம் நீர்த்தக்க தொட்டி கட்டப்படுகிறது.

 

* 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்க தொட்டியால் சுமார் 2500 குடும்பத்தினர் பயனடைய உள்ளனர்.

 

* ஆடி மாத காலத்தில் கோவிலுக்கும் இது பலன் அளிக்கும் விதமாகவே அமையும் என தெரிவிக்கப்பட்டது. 

 

இதனையடுத்து நீதிபதிகள், அரசு தரப்பில் மேல்நிலைய நீர் தேக்க தொட்டி கட்டுமானப் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்களின் பொது நலனை கருத்தில் கொண்டு இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.