மதுரை மேலூரை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கடந்த 2014ஆம் ஆண்டு மதுரை மேலூர் அருகேயுள்ள மணப்பச்சேரி என்ற கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக மேலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் மோகன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு அவர் கைதும் செய்யப்பட்டார். 



 

இந்த நிலையில் இந்த வழக்கானது மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் வழக்கின் இறுதிகட்ட விசாரணை நேற்று மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மதுரம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றச்சாட்டப்பட்ட மோகன்ராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்த குற்றத்திற்காக  மோகன் ராஜ்க்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து குற்றவாளி மோகன்ராஜ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



 

இந்த போக்சோ வழக்கில் சிறப்பாக பணியாற்றி நீதிமன்றத்தில் துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் நீதிமன்ற காவலருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.