நியூ ரைஸ் ஆலயம் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம். 2810 பேர் முதலீடு செய்த நிலையில் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் மீது  எடுக்கபட்ட  நடவடிக்கை என்ன- நீதிபதி கேள்வி.

 

நிதி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து ஒரு வருடம் ஆகியும் சொத்துக்களை முடக்காதது ஏன் நீதிபதி கேள்வி.? பொருளாதார குற்றப்பிரிவின் காவல்துறை கண்காணிப்பாளர் SP இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன எந்தெந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.




 

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு நியூ ரைஸ் ஆலயம் நிதி நிறுவனம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல் பட்டது.  இதன் கீழ் பல வகையான துணை நிறுவனங்களும் இயங்கின தங்களது நிறுவனங்களில் முதலீடு செய்தால், அதிகளவில் லாபம் ஈட்டலாம் எனக் கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர். ரூ.300 கோடி வரை முதலீடுகள் வசூலித்து, முதிர்வுத் தொகையோ, லாபமோ தராமல் ஏமாற்றியுள்ளனர்.  இது குறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நிறுவனத் தை நடத்திய ராஜா. மாதவன், உள்ளிட்ட 49 பேர் மீது கடந்த 2022ல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  இந்த வழக்கில் போலீசால் தேடப்படும் ராமநாத புரத்தைச் சேர்ந்த சுரேஷ். தனக்கு முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார்.




 

இந்த மனுவை நீதிபதி எம்.தண்டபானி விசாரித்தார். அரசுத் தரப்பில், இந்த நிறுவனத்தில் 2810 பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர் மனுதாரர் இயக்குநராக இருந்துள்ளார். நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளில் பங்கு உண்டு, 200 பேரிடம் இருந்து ரூ.8 கோடி வரை வசூலித்து கொடுத்துள்ளார் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இதுவரை ரூ.300 கோடி வரை வசூலானது தெரிகிறது. 2022ல் வழக்கு பதிந்தும், இதுவரை சொத்துக்கள் முடக்கப்படவில்லை. விசாரணை அதிகாரி கவனக்குறைவாக செயல்பட்டுள்ளார். எனவே, பொருளாதார குற்றப்பிரிவின் தென் மண்டல எஸ்பி, இந்த வழக்கில் தினசரி நடக்கும் விசாரணையை கண்காணிக்க வேண்டும். பிப். 15ல் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஆஜராகி, நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவருடன் பொருளாதார குற்றப்பிரிவின் தென்மண்டல எஸ்பியும் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.