ஒரு லட்சம் பேரில் 12 நபர்களுக்கு மட்டும் வரும்  அரியவகை நரம்பு மண்டல குயில்லன் பார்ரே  நோயால் பாதிக்கப்பட்ட வட மாநில பெண்ணுக்கு கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை அளித்த மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை.

 

அரியவகை நரம்பு மண்டல நோய்


 

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான ராஜ்கனி என்ற இளம்பெண் தனது கணவருடன் கேரள மாநிலம் இடுக்கியில் தோட்ட வேலைக்காக இடம் பெயர்ந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த ஜூன் மாதம் மூன்றாவதாக ஆண்குழந்தை பிறந்த மறுநாளே  வலிப்பு ஏற்பட்டு அருகில் உள்ள நெடுகண்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மேல்சிகிச்சைக்கா தேனி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து அப்பெண்ணுக்கு ஜூலை 7ம் தேதி கை மற்றும் கால்கள் முற்றிலும் செயலிழந்து, கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து ராஜ்கனி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரை சோதித்த மருத்துவர்கள் பெண்ணுக்கு அரியவகை நரம்பு மண்டல நோய்த்தாக்கமான குயில்லன் பார்ரே நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

 


 

ஆய்வில் தகவல்


 

இந்த நிலையில் கை, கால்கள் செயல்படாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஐவிஐஜு  இம்னோகுளோபின் ஒரு முறைகொடுக்க 20ஆயிரம் ரூபாய். மொத்தமாக 20 முறை குறிப்பிட்ட கால இடைவெளியில் கொடுக்கப்பட்டு தொடர் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சையும் வழங்கப்பட்டதால் கை, கால்கள் செயலிழந்த ராஜ்கனி தற்போது பூரண நலமடைந்துள்ளார். ராஜ்கனிக்கு முற்றிலும் கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை மற்றும் மருந்துகள் கிட்டத்தட்ட 5 லட்ச ரூபாய் மருந்துகள் இலவசமாக கொடுக்கப்பட்டது. மேலும் இந்த நோயானது மகப்பேறு காலக் கட்டத்தில் எளிதில் ஏற்படும் தன்மை கொண்டது இது பிரசவத்திற்கு முன்பு அல்லது பிரசவத்திற்கு பின்பு இல்லையென்றால் கர்ப்பம் உருவான சமயத்தில் தாக்கும் எனக் கூறப்படுகிறது. நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு பக்கவாத விளைவு வரை கொண்டு செல்லும் ஆற்றல் கொண்ட அரிய வகையான இந்த நோய் உலகில் ஒரு லட்சம் பேரில் 12 நபர்களுக்கு தொற்றி பாதிப்பு ஏற்படுத்தும் என ஆய்வில் தகவல் கூறப்படுகிறது.

 

எண்ணிக்கையால் தான் மருந்து பற்றாக்குறை


 

அரசு மருத்துவமனையை தேடி வரும் நபர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிப்பதில் அரசு மருத்துவமனைகள் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மாத்திரைகள் தருவதில்லை என்கிற புகார்கள் வருகிறது. மருத்துவமனை என்பது வீடு போல் தான் சுழற்சி முறையில் மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகளை ஒவ்வொரு துறைக்கும் தேவையானவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்திருக்கிறோம். அதைத் தாண்டி கூடுதலாக வரும் உள் மற்றும் வெளி நோயாளிகளின் எண்ணிக்கையால் தான் மருந்து பற்றாக்குறை ஏற்படுகிறது. என மருத்துவமனை பொறுப்பு முதல்வர் தர்மராஜ் தெரிவித்தார்.