தொழில் ரீதியான நட்பு

 

மதுரை மாநகர் அல் அமின் நகர் பகுதியை சேர்ந்த ஜாஹிர்உசேன்(43) கார் உரிமையாளரான இவர் தனது நண்பரான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு பணிகளை செய்யும் மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் மற்றும் பரவை பகுதியை சேர்ந்த கேட்டரிங் தொழில் செய்யும் முருகன் என்ற ரஞ்சித்குமார்(32) ஆகிய மூவரும் தொழில்ரீதியாக நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சிகள் ஏற்பாட்டு பணிகளை நடத்திவந்தபோது ரிசெப்ஷன் மற்றும் பியூட்டிசன் ஆர்டர்களுக்கு வரும் 3 பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டு 6 பேரும் நட்பாக இருந்துவந்துள்ளனர். இதில் ஜாகிர் உசேன், பரவை ரஞ்சித்குமார், தல்லாகுளம் சரவணகுமார் (25) மற்றும் அவர்களது தோழிகளான மூன்றுபேர் என 6 பேருக்கும் திருமணமாகிய நிலையிலும் நிகழ்ச்சிகளுக்கு செல்வது என தொடர்ந்து நட்பிலயே இருந்துவந்துள்ளனர். இதில் தனது தோழிகளான மூன்று பெண்களில் ஒரு பெண்ணிடம் நிகழ்ச்சி ஏற்பாட்டாரான தல்லாகுளம் சரவணக்குமார் நட்பாக (காதலில்) இருந்ததாக சொல்லப்படுகிறது.

 

நண்பர்களுடன் பார்ட்டி

 

இதில் ஒரு பெண்ணுக்கு பிறந்தநாள் என்பதால் மூன்று பெண்களும் கார் உரிமையாளர் ஜாகிர்  உசேன், அவரது நண்பரான ரஞ்சித்குமார் ஆகியோருடன் சேர்ந்து சொக்கிகுளம் பகுதியில் உள்ள கேக் கடை ஒன்றில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து மூன்று பெண்களும்  கார் உரிமையாளர் ஜாகிர் உசேன் மற்றும் அவரது நண்பரான கேட்டரிங் தொழில் செய்யும் ரஞ்சித்குமார் (32) ஆகிய 5 பேரும் ஜாகிர் உசேனின் காரில் மதுரை பாறைப்பட்டி பகுதியில் உள்ள உணவகத்திற்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் உணவகத்தின் முன்பாக காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அங்கு அமர்ந்து 3 பெண்கள் உட்பட 5 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது தல்லாகுளம் சரவணக்குமார் தனது தோழிக்கு போன் செய்து எங்கு இருக்கிறாய் என கேட்டுள்ளார். அப்போது போனில் பேசிய தோழி தான் பாறைப்பட்டி பகுதியில் உணவகத்தில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் சாப்பிடுவதற்காக காரில் வந்துள்ளோம் என கூறியுள்ளார். 

 

கத்தியை குத்து

 

இதனையடுத்து சரவணக்குமார் தனது நண்பரான காதர் இஸ்மாயில் (25) உடன் பைக்கில் பாறைப்பட்டி பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு சரவணக்குமாரின் தோழியுடன் ரஞ்சித்குமார் மற்றும் ஜாகிர்உசேன் ஆகியோர் இருப்பதை பார்த்துள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த தல்லாகுளம் சரவணன் கார் உரிமையாளரான ஜாகிர்உசேனிடம் எனது காதலியை ஏன் காரில் அழைத்துவந்தாய் என கூறி வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஜாகிர்உசேனின் அருகில் இருந்த உசேனின் நண்பரான ரஞ்சித்குமார்  தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணக்குமாரை குத்தியுள்ளார். அப்போது தனது நண்பனான சரவணக்குமாரை காப்பாற்ற சென்ற காதர் இஸ்மாயிலையும் ரஞ்சித்குமார் குத்தியுள்ளார். இதில்  காதர் இஸ்மாயிலுக்கு வயிற்றிற்கு கீழ் கத்தி ஆழமாக இறங்கி படுகாயமடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதேபோன்று , சரவணக்குமாருக்கும் வயிற்றில் கத்திகுத்தி காயம் ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து இருவரையும் ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

 

போலீஸ் விசாரணை

 

அப்போது தகராறு குறித்து தகவலறிந்த சத்திரபட்டி காவல்துறையினர் அங்கிருந்த ரஞ்சித்குமார்,  கார் உரிமையாளர் ஜாகிர் உசேன் மற்றும் 3 பெண்களையும் விசாரணைக்காக அழைத்துசென்றனர். இதனிடையே படுகாயத்துடன் சென்ற காதர் இஸ்மாயில் உடலை பரிசோதித்த மருத்துவர் வரும்வழியிலயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளளனர். இதையடுத்து காயமடைந்த சரவணக்குமார் மட்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ரஞ்சித்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரையும், ஜாகிர்உசேனையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். காதர்இஸ்மாயிலின் நண்பரான சரவணக்குமாரின் காதலியை ரஞ்சித்குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக காதலித்து கழட்டிவிட்ட நிலையில் அந்த பெண்ணை மீண்டும் சரவணக்குமார் காதலித்துவந்த நிலையில் அந்த பெண்ணை ரஞ்சித்குமாருடன் பார்த்த ஆத்திரத்தில் ஏற்பட்ட தகராறால் கொலை சம்பவம் நடந்துள்ளது. காதலால் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது தடுக்கசென்ற நண்பரான காதர்இஸ்மாயில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது குறிப்பிடதக்கது.