மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டா வழங்கும் சிறப்பு முகாமினை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
 
40 ஆயிரம் பட்டாக்கள் வழங்க நடவடிக்கை
 
மதுரை மாவட்டம், மேல அனுப்பானடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டா வழங்கும் சிறப்பு முகாமினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் இன்று (30.11.2025) தொடங்கி வைத்து பார்வையிட்டார். இம்முகாமில் அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் தெரிவிக்கையில்...,” வீட்டுவசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரியத்தில் பணம் செலுத்தி 20ஆண்டுகளாக காத்திருந்தும், பட்டா கிடைக்காமல் இருந்த மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், 2003-ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட, நீர்நிலைப் பகுதிகளில் அமைந்துள்ள வீட்டுவசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்குவதற்கு ஏதுவாக 40 அரசாணைகள் பெறப்பட்டு, மதுரை மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
முதலமைச்சர் மதுரை மாவட்டத்திற்கு வருகை தரும்போது பயனாளிகளுக்குப் பட்டா வழங்கப்படும்
 
இந்தத் திட்டம் எந்தக் கட்சி, சமுதாயம் அல்லது அரசியல் தலையீடும் இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது. நீண்ட காலமாக அனுபவித்துவரும் ஆனால் சர்வே செய்யப்படாத, சொந்தப் பட்டா இல்லாத குடியிருப்புகளுக்கு செட்டில்மென்ட் பட்டா வழங்கப்படவுள்ளது. உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் ரூ.400, இ-சலான் கட்டணம் ரூ.60 மற்றும் இ-சேவை மையத்தில் ஸ்கேன் செய்து ஏற்றும் கட்டணம் ரூ.60 என மொத்த கட்டணமாக ரூ.520 செலுத்த வேண்டும். மக்களின் சிரமத்தை போக்குவதற்கு இ-சேவை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவயில் முடிக்கப்பட்டு, முதலமைச்சர் மதுரை மாவட்டத்திற்கு வருகை தரும்போது பயனாளிகளுக்குப் பட்டா வழங்கப்படும்” எனவும்தெரிவித்தார்.
 
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா மற்றும் வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.