கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவம் எதிரொலி - மதுரை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு - பதறிய மருத்துவ அதிகாரிகள் - எலி ஓடுது, லைட்டே எரியல இப்டி இருட்டா இருக்குது என சராமாரியாக கேள்வி எழுப்பிய மாவட்ட ஆட்சியர்.

 

மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

 

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை, உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 

சீரமைக்க உத்தரவு

 

அப்போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏராளமான தெரு விளக்குகள் எரியாமல் இருந்த நிலையில் இது போன்று இருட்டாக இருக்கிறது. எனவும், தயவுசெய்து தெருவிளக்குகளயாவது சரி செய்து உடனடியாக சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வார்டு பகுதிகளாக முழுவதிலும் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தேவையற்ற வாகனங்களை உள்ளே நிறுத்த அனுமதிக்க கூடாது எனவும், மருத்துவமனை வளாகம் முழுவதிலும் நன்கு வெளிச்சமாக இருக்கக்கூடிய  வகையில் அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். தொடர்ச்சியாக அரசு மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

 

நாய், எலிகள் கண்டு அதிர்ச்சி

 

இதனையடுத்து மருத்துவமனை அதிகாரிகளிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் தேவையற்ற நபர்கள்  அரசு மருத்துவமனைக்குள் வருவதை தவிர்க்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர். தொடர்ந்து வார்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளின் பார்வையாளர்கள் இருக்கும் பகுதியில் மாவட்ட ஆட்சியர் தலைவர்  நடந்து சென்றபோது அங்கு நாய்கள் படுத்து கிடப்பதையும், எலிகள் ஓடுவதை பார்த்து என்ன இப்படி எலிகள் ஓடுகிறது, நாய்கள் கிடக்கின்றது? எனக் கூறி இதனை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

 

நமக்கு நாமே திட்டம்

 

மேலும் அரசு மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகளை நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரியக்கூடிய மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் மாணாக்கரகளுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை மருத்துவமனை அதிகாரிகள் செய்து தர வேண்டும் எனவும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாநகர காவல் ஆணையர் லோகநாதன் , மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் மற்றும் மருத்துவமனை நிலைய அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.