மதுரையில் கஞ்சா கடத்திய வழக்கில் பிரபல ரௌடி சபாரத்தினம் உள்ளிட்ட 5 பேருக்கு 14வருட சிறை தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அளித்து மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம்.
காவல்துறையினர் நடவடிக்கை
தென்மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை கஞ்சா கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர். இந்நிலையில் தான் மதுரையில் கஞ்சா கடத்திய வழக்கில் பிரபல ரௌடி சபாரத்தினம் உள்ளிட்ட 5 பேருக்கு 14வருட சிறை தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அளித்து மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கார் மூலமாக கஞ்சா கடத்தல்
மதுரை மாநகர் எஸ்.எஸ்.காலனி காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் கார் மூலமாக கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் மாடக்குளம் மெயின் ரோடு கோரவாய்க்கால் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை மடக்கியபோது அதில் 21 பொட்டலங்களில் கஞ்சா பதுக்கி எடுத்திவரப்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து கஞ்சாவை ஆந்திராவில் இருந்து சபாரத்தினம் என்பவரின் உதவியுடன் கடத்தியதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து மதுரை சின்ன அனுப்பானடியைச் சேர்ந்த சபா என்ற சபாரத்தினம் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கானது மதுரை மாவட்ட முதலாவது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது.
வழக்கின் இறுதி விசாரணை
இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார். பின்னர் இந்த வழக்கில் 3 பேர் மீது குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டது. இதனையடுத்து சின்ன அனுப்பானடியை சேர்ந்த சபா என்ற சபாரத்தினம் மற்றும் காமராஜபுரம் திலீப்குமார் , அவனியாபுரம் பராசக்திநகர் ஹரிஹரசுதன் ஆகிய மூவருக்கும் தலா 14 வருடம் சிறை தண்டனையும், தலா 1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதேபோன்று மதுரை மாநகர் கீரைத்துறை காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மூலக்கரை மயானம் முன்பு கஞ்சா கடத்திய வழக்கில் மதுரை மாவட்டம் வலையங்குளம் பகுதியை சேர்ந்த காளிஸ்வரன் (எ) கலாம்காளி, மேல அனுப்பானடி TNHB காலனியை சேர்ந்த பாபுராஜ் (என்ற) டிங்கால் ஆகிய இருவருக்கும் 14 வருடம் சிறை தண்டனையும், தலா 1 லட்சம் அபராதமும் , மேல அனுப்பானடியை சேர்ந்த சேகர் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இதனையடுத்து சபாரத்தினம் உள்ளிட்ட 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.