மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்த  கரட்டுபட்டியைச் சேர்ந்த (23)  இளைஞர் கோட்டைச்சாமி என்கிற ரோசன். இவர் மீது  வழிப்பறி, கஞ்சா, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில்  கோட்டைச்சாமி கடந்த 7 ஆம் தேதி கொலை செய்யப்பட்டு, கல்லை கட்டி விவசாய கிணற்றில் உடல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச்சம்பவம் குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. 

 

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க



 

காவல்துறை விசாரணையில், கேரளாவில் வேலை பார்த்து வந்த கோட்டைச்சாமி தீபாவளி பண்டிகைக்காக கரட்டுபட்டிக்கு வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான சிவாவின் வீட்டில் வளர்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளையை திருடி விற்றுள்ளார். இந்நிலையில் விற்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளையை குடும்பத்தினர் உதவியுடன் சிவா பணத்தை கொடுத்து மீட்டுள்ளார். இந்த திருட்டு சம்பவத்தால் நண்பர்களான கோட்டைச்சாமிக்கும், சிவாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மீண்டும் ஜல்லிக்கட்டு காளையை திருடி கேரளாவுக்கு அனுப்பி விடுவேன் என கோட்டைச்சாமி சிவாவை மிரட்டியுள்ளார்.



 

இதனால் ஆத்திரமடைந்த சிவா அப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான சுபாஷ், ஜெயசூர்யா, பூவேந்திரன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, கோட்டை சாமியை மது குடிக்க விவசாய கிணறு அருகே அழைத்து சென்றுள்ளனர்.  அப்போது மதுகுடிக்கும் போது கோட்டைச்சாமியை நான்கு பேரும் சேர்ந்து கொடூரமாக அரிவாளால் வெட்டியதோடு, உடலை கல்லை கட்டி கிணற்றில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். பின் எதுவும் தெரியாததுபோல நாடகமாடி அவர்களும் இறந்த கோட்டைச்சாமியின் உடலை மீட்பதுபோல் நாடகமாடி உள்ளனர். இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தீவிரமாக சோழவந்தான் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், சோழவந்தான் கரட்டுபட்டியை சேர்ந்த சுபாஷ், ஜெயசூர்யா, பூவேந்திரன், சிவா ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.