மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில், அனுசியா வெள்ளையப்பனுக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு கட்டிடங்களில் பணியாற்றி வந்த வடக்கம்பட்டியைச் சேர்ந்த அம்மாவாசி, வல்லரசு, கோபி மற்றும் புளியகவுண்டன்பட்டி, அழகுசிறையைச் சேர்ந்த பிரேமா என்ற 5 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.






மேலும், அழகுசிறையைச் சேர்ந்த அங்கம்மாள், கருப்பசாமி, நாகலட்சுமி, மகாலெட்சுமி, ஜெயப்பாண்டி, பச்சையக்காள், கருப்பசாமி, அன்னலட்சுமி, மாயத்தேவர், பாண்டியம்மாள், பேச்சியம்மாள் உள்ளிட்ட 13 பேர் படுகாயமடைந்த நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.



தகவலறிந்து விரைந்து வந்து உசிலம்பட்டி, திருமங்கலம் தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் திருமங்கலம், சிந்துபட்டி காவல் நிலைய போலீசார் சிதறிய உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.