திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (நாளை) பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவளவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.




பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடி, பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் நாளை மதியம் 2 மணிக்கு மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 3 மணிக்கு அம்பாத்துரை அருகே உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்துக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் காந்திகிராமம் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார்.


பிரதமர் மோடி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராமத்துக்கு வருவதால், நேற்று 2 ஹெலிகாப்டர்களை இயக்கி ஒத்திகை நடைபெற்றது. அதன்படி, மதுரையில் இருந்து 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் காந்திகிராமத்துக்கு இயக்கப்பட்டு ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும் காந்திகிராம பல்கலைக்கழக பகுதி, சின்னாளப்பட்டி பகுதியில் 2 ஹெலிகாப்டர்கள் தாழ்வாக வட்டமிட்டபடி பறந்துகொண்டே இருந்தது.




பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக 2 ஹெலிகாப்டர்களும் 3 முறை ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் இறங்குவதும், பின்னர் பறப்பதுமாக ஒத்திகை நடந்தது. அதைத்தொடர்ந்து மதியம் 2 ஹெலிகாப்டர்களும் மதுரைக்கு திரும்பி சென்றன. ஒத்திகைக்காக சுமார் 2 மணி நேரம் 2 ஹெலிகாப்டர்களும் ஒன்றன்பின் ஒன்றாக சின்னாளப்பட்டி பகுதியில் தாழ்வாக பறந்ததை சின்னாளப்பட்டி, காந்திகிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், சிறுவர்களும் ஆர்வத்தோடு பார்த்தனர்.


பிரதமர்  வருகைக்காக பல்கலைக்கழக வளாகம், ஹெலிகாப்டர் இறங்குதளம் ஆகிய பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படையினரின் 3 அடுக்கு  பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு பணிகளை உயர் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அதன்படி தற்போது காந்திகிராம பல்கலைக்கழகம் மற்றும் காந்திகிராமம் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். இதையொட்டி நேற்று காலை முதலே தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் காந்திகிராமத்துக்கு வந்துள்ளனர்.




மேலும், பிரதமர் மோடி ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு கார் மூலம் செல்லும் வழியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வீடுகளில் உள்ளவர்கள் யார்-யார் என்ற தகவலை சேகரித்து வருகின்றனர். இதுதவிர போலீசாரின் மோப்ப நாய்கள், வெடிகுண்டு பரிசோதனை நிபுணர்கள் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் பல்வேறு பாதுகாப்பு அதிகாரிகள் பல்கலைக்கழகத்தை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.




பிரதமர் வருகையையொட்டி முன்னிட்டு காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் வியாழக்கிழமை, நாளையும் வெள்ளிக்கிழமையும் விடுமுறை விடப்பட்டு உள்ளது. சனி, ஞாயிறு விடுமுறையும் சேர்த்தால் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வருவதால் போலீசார் தங்குவதற்கு வசதியாக திண்டுக்கல்லில், பழனி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளுக்கும் இன்று முதல் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண