மதுரை அழகர்கோவில் பகுதியில் உள்ள கள்ளழகர்கோவில் மடப்பள்ளி அருகே உள்ள அறைகளில் தீவிபத்து - புத்தகங்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதால் பக்தர்கள் சோகம் அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலில் நவராத்திரி விழா மற்றும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள மடப்பள்ளியின் அருகேயுள்ள அறைகளில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து அருகில் உள்ள பக்தர்கள் அவசரவசரமாக பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தும் சிறிது நேரம் தாமதமான நிலையில் அடுத்தடுத்த அறைகளுக்கு தீப்பரவ தொடங்கியது.
தீவிபத்து காரணமாக அறையில் உள்ள புத்தகங்களுக்கு கோவிலுக்கு சொந்தமான மரப்பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்தன. கோவில் பணியாளர்கள் முதற்கட்டமாக தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றும் அணைக்க முடியாத நிலையில் தீ மளமளவென பரவ தொடங்கியது. தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்துவருகின்றனர். முதற்கட்டமாக மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்திவருகின்றனர். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கோவில்களில் தீ தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிட்ட நிலையிலும் கோவில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.