மதுரை தொல்லியல் ஆய்வாளர் து. முனீஸ்வரன் , வரலாற்று ஆய்வாளர் அருள் சந்திரன் ஆகியோர் திருமங்கலம் வட்டம் மேல உரப்பனூர் பெரிய கண்மாய் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு  மேற்கொண்டபோது இரட்டை தூணுடன் குமிழித்தூம்பு எழுத்து இருப்பதை கண்டறிந்தனர். மை படி எடுத்து ஆய்வு செய்த போது கி.பி 9 நூற்றாண்டை சேர்ந்த முற்கால பாண்டியர் கால கிரந்த கல்வெட்டு என்று கண்டறியப்பட்டுள்ளது.






 

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் முனைவர் து. முனீஸ்வரன்  கூறியதாவது, "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சமூகம் வேளாண்மை செய்வதற்கு ஏரி குளம் கண்மாய் போன்ற நீர்நிலைகளை உருவாக்கி அறிவியல் தொழில்நுட்பத்துடன் பயன்படுத்திய குமிழித்தூம்பு மூலம் பாசன செய்தது வியப்பாகத்தான் இருக்கிறது" என்றார்
 


குமிழித்தூம்பு 

 

ஏரி, குளம் ,கண்மாய் போன்ற நீர் நிலைகளுக்கு மழைநீர் ,வாய்க்கால் ஓடைகள் வழியாக நீர் வரும்போது நீரோடு களிம்பும்  வண்டலும் சேர்ந்து வருவது நீர்நிலைகளில் தூர்ந்து போவதற்கு  முக்கிய காரணம். பாசன கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்துவிடும் "குமிழிகள்"  ஏரிக்கரையில் மதகு போல் இருப்பதில்லை .ஏரிக் கரையிலிருந்து சுமார் 200 முதல் 300 அடிகள் தள்ளி  எரியின்  உட்பகுதியில் இருக்கும் . கால்வாய் அல்லது ஆற்றின் அளவைப் பொறுத்து குமிழிகள் எண்ணிக்கை கூடும். ஏரியின் தரைமட்டத்தில் வலிமையான கல் தளம் அதனடியில் கருங்கற்களால் ஆன தொட்டி அமைத்து , மேற்பத்தில் நீர் போவதற்கு பெரிய " நீரோடித்துளை" உருவாக்கி சுரங்க கால்வாய் மூலம் ஏரிக்கும்  , வெளியே இருக்கும் பாசனக்கால்வாய் இணைத்து துளையிட்டு இருக்கும்.



பாசனத்திற்கு நீர் தேவைக்கேற்ப குறைக்கவும் கூட்டவும் தூம்புக்கல்லை  பயன்படுத்தினார்கள் .தூம்புக்கலை  மேலும் கீழும் இயக்குமாறு கற் சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கல் தொட்டியின் பக்கத்தில் மூன்று சிறு துளைகள் இடம் பெற்று இருக்கும் அவை சேரோடித்துளை என்பார்கள் . பாசனத்திற்கு நீர் திறப்பதற்கு வலிமையானவர் நீந்தி சென்று தூம்பு கல்லை தூக்குவார்கள்  .இப்போது நீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும் கல் சட்டத்தில் உள்ள அழுத்தம் குறைவாக இருக்கும். இதனால் சேரோடி துளை வழியே வண்டல், களிம்பு நிறைந்த நீர் வேகமாக வெளியே ஏறும். நீரோடி துளை வழியாக 80 சதவீதம் நல்ல தண்ணீரும்,20 சதவீதம் மண் கூழ் தண்ணீர் வெளியேறும். நீரோ ருடன் சேர்ந்து மண் கூழ் வெளியேறுதால் சத்தான மண் பயிர்களுக்கு உரமாகவும், ஏரி பகுதியும் தூர் வழிந்து சுத்தமாக காணப்படும்.



கல்வெட்டு  செய்தி

 

பெரிய கண்மாய் மேற்கு மடைப்பகுதியிலிருந்து  சுமார் 300 அடி தொலைவில் 10 அடி உயரத்தில் இரண்டு தூண்களுக்கு இடையில் இரண்டு படுக்கை கற்கள் சிதிலமடைந்து  காணப்பட்டது. தூணின் வெளிப்புறத்தில் முகம் போன்ற அழகிய வடிவமைப்பு காணப்படுகிறது. கல் தூணின் உச்சிப்பகுதியில் கலசம் வடிவத்தில் தாமரை பூ போல அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு குமிழ் தூண் நடுப்பகுதியில்  ஸ்ரீ தாஸகந், ஸ்ரீநாஸகந் என்ற வரி கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. தாஸகந், நாஸகந் என்பவர்கள் குமிழித்தூம்பு கட்டி கொடுத்து இருக்கலாம் என அறியமுடிகிறது. இதன் காலம் கி.பி 9ம் நூற்றாண்டு சேர்ந்தவை .  கண்மாயின்  மற்றொரு இடத்தில் குமிழித்தூம்புயில்  பாண்டியன் மன்னர் வீர நாராயணனின் சிறப்பு பெயர்களான கரிவரமல்லன் ,வீரநாராயணன் என்றும்,  கல்வெட்டு மேல் பகுதி வெண்கொற்றக் குடையும் , அதன் இருபுறமும் சாமரங்கள் கீழ் பகுதி கலசம் மற்றும் விளக்கும் கோட்டுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் காலம் கி.பி. 9ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்பது மற்றொரு சிறப்பு என்றார்.