டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போராடும் மக்களை கிராமங்களில் சென்று சந்தித்த அமைச்சர் மற்றும் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள், டங்ஸ்டன் திட்டம் வராது, தமிழக அரசு உங்களோடு துணை நிற்கும் என அமைச்சர் மூர்த்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
மக்கள் பேரணி
கடந்த 7 ஆம் தேதி மேலூர் ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன பேரணி நடத்தி மதுரை மாநகருக்குள் ஆர்பாட்டம் நடத்திய எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தியது. தொடர்ந்து டங்ஸ்டன் திட்டத்தை மேலூர் பகுதி மக்கள் முழுமையாக ரத்து அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இன்று அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் மக்களை சந்தித்து சென்றுள்ளனர்
கிராமங்களுக்கு சென்ற அமைச்சர்
Tungsten Protest: மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, வல்லாளப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளை உள்ளடக்கிய ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விடுத்த நிலையில் அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசு மறு ஆய்வு செய்ய அறிவித்து உள்ளது. இந்த டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என மேலூர் மக்கள் பெரும் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உள்ளிட்டோர் மேலூர் அருகே அரிட்டாபட்டி, அ. வல்லாளபட்டி, கிடாரிபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறி பொதுமக்களிடம் உரையாற்றினர்.
டங்ஸ்டன் வந்தால் ராஜினாமா செய்வேன் என தெரிவித்துள்ளார்
அப்போது பேசிய அமைச்சர் மூர்த்தி..,”டங்ஸ்டன் திட்டம் வராது. அதனை, தெளிவுபடுத்துமாறு முதல்வர் கூறியதால் நான் மக்களை சந்திக்க வந்துள்ளேன். ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம் என நேற்று சட்டசபையில் நிதி அமைச்சர் பேசியுள்ளார். ஒருபோதும் தமிழ்நாடு அரசு இந்த டங்ஸ்டன் திட்டத்தை அனுமதிக்காது. மாவட்ட நிர்வாகம், மற்றும் அரசும் மக்களுக்கு உறுதுணையாக எப்போதும் இருக்கும். கவலைப்பட வேண்டாம். அரிட்ட்டாபட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் போட்ட போது நானும் அதில் கலந்து கொண்டேன். இது ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. தீர்மானம் போட்டோம். நான் கட்சி பற்றி பேசவில்லை அது அரசியல் ஆகிவிடும். சட்டசபையில் திட்டம் வராது, நான் வர விட மாட்டேன். ராஜினாமா செய்வேன் என முதல்வர் தெரிவித்திருந்தார்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
ஒரு போதும் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் திட்டம் வராது. ஒரு பகுதியை ஒதுக்கிவிட்டு ஆய்வு என சொன்னாலும் எந்தப் பகுதியாக இருந்தாலும் ஒரு துளி கூட டங்ஸ்டன்னுக்காக கொடுக்க முடியாது. உங்களோடு நாங்களும் போராட்டத்தில் நிற்போம் என பேசினார். மேலும் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தின் போது பொதுமக்கள் 5 ஆயிரம் பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததோடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனவும் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி சட்டத்தில் உள்ளவாறு போராடிய மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இன்று மேலூர் அருகே அரிட்டாபட்டி, அ. வல்லாளபட்டி, கிடாரிபட்டி, அழகர்கோவில், தெற்குதெரு, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் அமைச்சர், ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்டோர் பொதுமக்களை சந்தித்து உரையாற்றி சென்றனர்.