மதுரையில் மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியின்போது மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
பேருந்து ஓட்டும் போது உயிரிழந்த ஓட்டுநர்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தனியார் நகர பேருந்தில் ஓட்டுனராக பிரபு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பழனியில் இருந்து கணக்கன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனர் பிரபுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஸ்டேரிங்கில் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முன்னாள் அமர்ந்திருந்த பெண்மணி கூச்சலிட்டார். பேருந்தின் நடத்துனர் உடனடியாக சாதுரியமாக செயல்பட்டு பிரேக்கை கையால் அழுத்தி பேருந்தை நிறுத்தினார். இதனால் நல்வாய்ப்பாக பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். அப்போது ஸ்டேரிங்கில் மயங்கி விழுந்திருந்த பிரபு சிறிது நொடிகளில் உயிரிழந்தார். உடனடியாக மீட்கபட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரையில் மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியின்போது மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் மதுரை மாநகர் பீ.பீ.சாவடி மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனா கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துவருகிறார். மதுரை காளவாசல் பகுதியில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். இந்நிலையில் மதுரை கோச்சடை முத்துமாரியம்மன் கோயில் அருகே மின் கம்பத்தில் ஏற்பட்ட பழுது தொடர்பான புகாரின் கீழ் சரிசெய்வதற்காக மின்கம்பத்தில் ஏறி நின்றபடி பணி செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக போலீஸ் விசாரணை
தொடர்ந்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை இணைப்பை துண்டித்து அவரது உடலை மீட்டனர். இதனையடுத்து அவரது உடலானது உடற்கூராய்விற்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்மாவட்டங்கள் ஏற்படும் சோகம்
கடந்த சில நாட்களுக்கு முன் சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டை பகுதியில் செயல்படும் தனியார் குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து திண்டுக்கல், மதுரை என தென்மாவட்டங்களில் வேலை செய்யும்போது பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவம் தென்மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.