மறுசீரமைப்பு பணிகளில் புதிதாக கட்டப்பட்ட பல அடுக்கு இருசக்கர வாகன காப்பகம் கிழக்கு நுழைவாயிலின் தெற்கு பகுதியில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

பல அடுக்கு நான்கு சக்கர வாகனம் காப்பகம்
 
மதுரை ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மேற்கு நுழைவாயிலின் தெற்கு பகுதியில் ரூபாய் 6.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு அடுக்கு கார் நிறுத்துமிடம் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. மதுரை கோட்டத்தில் முதன்முதலாக பயன்பாட்டிற்கு வரும் பல அடுக்கு நான்கு சக்கர வாகனம் காப்பகம் 2,413 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 60 கார்கள் நிறுத்தலாம்.
 
காப்பகம் விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்கு விடப்படும்
 
இந்த புதிய காப்பகத்தில் சிசிடிவி கண்காணிப்பு, மின் தூக்கி, கழிப்பறைகள், மின்சார வாகன மின்கலத்திற்கு சக்தி ஊட்டும் வசதி, மின்னணு வாயிலாக கட்டணம் செலுத்தும் வசதி, தீயணைப்பு கருவிகள் போன்ற நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த காப்பகத்தில் கார்கள் நிறுத்த இரண்டு மணி நேரத்திற்கு ரூபாய் 30, ஆறு மணி நேரத்திற்கு ரூபாய் 50, பனிரெண்டு மணி நேரத்திற்கு ரூபாய் 60,  24 மணி நேரத்திற்கு ரூபாய் 100 கட்டணமாக வசூலிக்கப்பட இருக்கிறது. இந்த வாகன காப்பகத்தை மேலாண்மை செய்ய மின்னணு ஒப்பந்த புள்ளி நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறைகள் நிறைவடைந்து காப்பகம் விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்கு விடப்படும்.
 
166 கார்கள் நிறுத்தும் வசதி உள்ளது
 
மேலும் இதே போல ஒரு மூன்றடுக்கு நான்கு சக்கர வாகன காப்பகம் கிழக்கு நுழைவாயிலின் வடக்கு பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த காப்பகம் 9173.45 சதுர மீட்டர் கொண்டது. இதில் 166 கார்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இதில் கார்கள் உள்ளே சென்று வெளியே வர மூன்று நுழைவாயில்கள் உள்ளன. இதிலும் சிசிடிவி கண்காணிப்பு, மின் தூக்கி, கழிப்பறைகள், மின்சார வாகன மின்கலத்திற்கு சக்தி ஊட்டும் வசதி, மின்னணு வாயிலாக கட்டணம் செலுத்தும் வசதி, தீயணைப்பு கருவிகள் போன்ற நவீன வசதிகள் உள்ளன. ஏற்கனவே மறுசீரமைப்பு பணிகளில் புதிதாக கட்டப்பட்ட பல அடுக்கு இருசக்கர வாகன காப்பகம் கிழக்கு நுழைவாயிலின் தெற்கு பகுதியில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.