தீபாவளி பண்டிகைக்காக ஏராளமான புதிய ரக ஆடைகள், புதிய வடிவிலான நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விறுவிறுப்புடன் விற்பனையாகி வருகிறது.


மதுரையில் தீபாவளி கூட்டம்


தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மதுரையில் உள்ள நான்கு மாசி வீதிகள், விளக்குத்தூண், கீழவாசல், காமராஜர் சாலை, பைபாஸ்சாலை, அண்ணாநகர் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள கடைவீதிகளில் தீபாவளி பண்டிகைக்கு தேவையான ஆடைகள், நகைகள் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்காக தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தர தொடங்கினர். தீபாவளி விற்பனை காரணமாக மாசி வீதிகள் முழுவதிலும் பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

 


 

மதுரை மாநகர் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு


 

தீபாவளி விற்பனையை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். 25 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். 

 

தீபாவளி பண்டிகைக்காக ஏராளமான புதிய ரக ஆடைகள்


 

விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பொதுமக்களும் ஆர்வமுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களை வாங்கிவருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக ஏராளமான புதிய ரக ஆடைகள், புதிய வடிவிலான நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள்  விறுவிறுப்புடன் விற்பனையாகி வருகிறது.

 








பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை


 

1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமைபட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

2. மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

 

தவிர்க்க வேண்டியவை


 

1. அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

2. மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் வழிபாட்டுத் தலங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

3. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.