பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு வராமல் தாமதமாக வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. இது என்ன பள்ளிக் கூடமா நேரத்திற்கு வரவேண்டும் என கேள்விகளும் எழுப்பிக் கொள்வார்கள் சில அதிகாரிகள். இந்த நிலையில் தாமதமாக வந்த அதிகாரிகளை பள்ளி மாணவர்களை போல் வெளியேவே நிற்க வைத்த சம்பவம் வர்வேற்பை பெற்றுள்ளது. அரசு அதிகாரிகளும் சரியான நேரத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்லும் விதமாக  மதுரையில் நடைபெற்ற சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. கடந்த வாரம் மதுரை குறைதீர் கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை அனுமதிக்க மறுத்த மாவட்ட ஆட்சியர் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வைத்தார். இந்த நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகுகிறது.
 




 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை அன்று குறைதீர் கூட்ட முகாம் நடைபெறும். இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக கடந்த வாரத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு கூட்டம் நடத்துவார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஆய்வு கூட்டம் தொடங்குவதில்  தாமதமாவதால் பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருப்பதோடு மக்களிடம் இருந்து மனுக்கள் பெறும்போது கடும் தள்ளுமுள்ளு ஏற்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது.



 

இந்நிலையில் வரும் நாட்களில் குறைதீர் மனுக்களை பெறுவதற்கு முன்பாக நடைபெறும்  ஆய்வு கூட்டத்திற்கு காலை 9.30 மணிக்கு வருகை தர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சங்கீதா வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் குறைதீர் கூட்டத்திற்கு காலை 9.30 மணிக்கு மேலாக வந்த அதிகாரிகளை ஆய்வு கூட்டத்திற்கு கலந்துகொள்வதற்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா அனுமதி மறுத்தார். இதனையடுத்து ஆய்வுக் கூட்டத்திற்காக வந்த காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துதுறை அரசு அதிகாரிகள் காலை 9:30 மணி முதல் 3 மணி மூன்று மணி நேரத்திற்கு மேலாக வெளியிலேயே காத்திருந்தனர். சில அதிகாரிகள் 2 நிமிடங்கள் தாமதமாக வந்த நிலையிலும் மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தனியாக அமர்ந்தபடி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அரசு ஊழியர்கள் சில நிமிடங்கள் தாமதமாக வந்ததால் 2 மணி நேரத்திற்கு மேலாக எந்த தகவலும் சொல்லாத நிலையில் அரசு ஊழியர்கள்  5 நிமிட தாமதத்திற்காக 3 மணிநேரம் பணியை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

 



 

அதிகாரிகள் பலரும்  நெருக்கடியான பேரிடர் நேரங்களிலும், தேர்தல் நேரங்களிலும் இரவு பகலாக பணி நேரம் முடிந்தும் வேலை செய்துள்ளோம். ஆனால் 5 நிமிட தாமதத்திற்காக இப்படி எங்களை காத்திருக்க வைப்பதா என புலம்பினர். ஆனால் இது போல் செய்தால் தான் அதிகாரிகள் சரியான நேரத்திற்கு வருவார்கள் என சமூக ஆர்வலர்கள் ஆட்சியருக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர்.