இது ஆட்டோவா? சந்தன கடையா? ஆயுதபூஜைய முன்னிட்டு சந்தனத்தால் ஆட்டோவை முழுவதுமாக அலங்கரித்த ஆட்டோ உரிமையாளர் - சாலையில் சென்றபோது வியந்து பார்த்த பொதுமக்கள்.
ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி
நவராத்திரி நிறைவு விழாவாக ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை விழா என்பது தமிழ்நாட்டில் மிக முக்கிய விழாக்களின் ஒன்றாக கருதப்படுகிறது. பல்வேறு இடங்களில் சாதி, மதம் பார்க்காமல் ஆயுத பூஜை விழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தாங்கள் செய்கின்ற தொழிலுக்கு மரியாதை செய்யும் விழாவாக இது பார்க்கப்படுவதால், வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் இந்த விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
சந்தன மயமாக மாறிய ஆட்டோ
அதேபோன்று ஆயுத பூஜை விழாவின் பொழுது நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு நிறுவனம் சார்பில், இனிப்புகள் வெகுமதிகள் உள்ளிட்டவை வழங்குவது வழக்கமாக உள்ளது. இதேபோன்று அரசு அலுவலகங்கள் அரசு சார்ந்த இடங்களில் கூட, ஆயுதபூஜை விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஆயுத பூஜை என்றாலே ஆட்டோ ஓட்டுநர்களின் கொண்டாட்டம் என்பது பிரதானமாக இருக்கும் அந்த வகையில் மதுரை கே.புதூரைச் சேர்ந்த ரவி என்ற ஆட்டோ உரிமையாளர் ஆயுத பூஜையை முன்னிட்டு தனது ஆட்டோவிற்கு முழுவதுமாக கண்ணாடி முதல் சக்கரம் , டாப் , நம்பர் பிளேட் என அடையாளம் தெரியாத வகையில் ஆட்டோ முழுமையும் 3 மணி நேரம் தொடர்ந்து சந்தனத்தால் பூசி அதில் குங்குமம் வைத்து அலங்காரம் செய்துள்ளார்.
பொதுமக்கள் வியப்பு
இந்த சந்தன அலங்காரத்தோடு இவரது ஆட்டோ சாலையில் செல்லும் பொழுது சாலையில் செல்லக்கூடிய பொதுமக்கள் போக்குவரத்து காவல்துறையினர் என அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துசெல்கின்றனர். இது குறித்து ஆட்டோ உரிமையாளர் ரவியிடம் அவரிடம் கேட்கும் பொழுது "ஆயுத பூஜை இல்ல இது என் மகனுக்கான பூஜை இது ஆட்டோ அல்ல என் மகனைப் போன்றது என்பதால் அவனை முழுவதும் சந்தனத்தை பூசி குளிப்பாட்டி அலங்காரம் செய்து மகிழ்ச்சியடைவேன்" என கூறினார். கடந்த கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டோ ஓட்டி வரும் ரவி ஒவ்வொரு ஆயுத பூஜையின் பொழுதும் இதே போன்று தான் தனது ஆட்டோவை முழுமையாக சந்தனத்தால் அலங்கரித்து ஓட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டோ என்பது எனது மகன் போல எனக்கு எல்லாமுமாக இருந்து வருகிறது கஷ்டம் மகிழ்ச்சி என எது வந்தாலும் இந்த ஆட்டோ தான் என்னுடன் இருக்கும் என்பதால் ஆயுதபூஜை என்பது அவனுக்கான கொண்டாட்டமாக கருதி இதுபோன்ற அலங்காரம் செய்து மகிழ்ச்சியடைவேன் என தெரிவித்தார்
மதுரையில் ஆயுத பூஜையை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வித்தியாசமான முறையில் முழுவதுமாக சந்தானத்தால் அலங்கரித்து கொண்டாடி மகிழ்ச்சியடைந்த சுவாரசியமும் அரங்கேறியுள்ளது.