மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் வில்லூர் அருகே உவரி பெரிய கண்மாய் கலிங்கில் 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது.


வில்லூர் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலமுருகன் கொடுத்த தகவல்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள் அனந்த குமரன், தங்கப்பாண்டி , அஜய் ஆகியோர் உவரி பெரிய கண்மாயில் கள ஆய்வு மேற்கொண்ட போது  கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் கலிங்கு பகுதியில் லிங்க வடிவம் தனி தூணில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது.  இக்கல்வெட்டை மை படி எடுத்து ஆய்வு செய்தபோது கி.பி 16 நூற்றாண்டை சேர்ந்த நீர் பங்கீடு முறை கல்வெட்டு என்பதை கண்டறிந்தார். 




இது குறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் து. முனீஸ்வரன் கூறியதாவது...,” பண்டையத் தமிழர் நீர் மேலாண்மையில் சிறப்பாக பின்பற்றினார்கள். மழைநீரைச் சேமிப்பது,  சேமித்த நீரைத் திறம்பட பயன்படுத்த ஆயிரக்கணக்கான நீர்நிலைகள்,  ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அனைக்கட்டுகள், வாய்க்கால்கள் அவற்றோடு தொடர்புடைய பிற கட்டுமானங்களை உருவாக்கினார்கள். நீர் பங்கீடு முறை சங்க கால முதல் தொன்றுதொட்டு இன்றளவும் பின்பற்றி வருகிறோம்.


 






கலிங்கு


கலிங்கு என்பது கண்மாய்,  ஏரி, ஆறு போன்ற நீர் நிலைகளில் நீர் முறைப்படுத்தி வெளியேற்றுவதற்கு கற்களைக் கொண்டு அமைக்கப்படும் கட்டுமானம் கலிங்கல்,  கலிஞ்சு என்று அழைக்கப்படும். கலிங்குகளில் வரிசையாக குத்து கற்களை ஊன்றி உள் பகுதியில் ஒரே மாதிரியான இடைவெளி  விட்டு பலகை, மணல் மூட்டைகளை சொருகப்படுவதால் கண்மாய் நிரம்பிய பிறகு மறுகால் பாயும் இடம் கலிங்கு அமைந்திருக்கும்.  நீர் வெளியேறும் அளவு முறையும் ஒழுங்குபடுத்தப்படுகிறது. சில இடங்களில் கண்மாய் வரத்துக் கால்வாய் பகுதியில் கலிங்கு அமைந்திருப்பதால் அடுத்தடுத்து நீர் நிலைகளுக்கு நீரை திருப்பிவிட்டு பங்கீடு செய்வதற்கு ஏதுவாக அமைகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நீர் பங்கீடு முறையை ஊராட்சி அமைப்புகளில் மூலம் உருவாக்கி மேலாண்மை செய்வதற்கு தனியாக கலிங்கு வாரியம் என்ற குழுவை ஏற்படுத்தி நிர்வாகம் செய்தார்கள். 




கல்வெட்டு செய்தி 


உவரி பெரிய கண்மாய் நீர் நிரம்பி வெளியேறு கிழக்கு பகுதியில் லிங்க வடிவம் கொண்ட தனி தூண்  கல்லில்  5 அடி உயரம், 1 அடி அகலம்,  6 வரி எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது. இக்கல்வெட்டை மை படி எடுத்து ஆய்வு செய்தபோது முதல் இரண்டு வரிகள் முற்றிலும் தேய்மானம் ஏற்பட்டு காணப்படுகிறது.  காணியம் நீர் அளித்த பாணிக்கர் செய்த என்ற எழுத்து மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது .உவரி பெரிய கண்மாய் இருந்து நீர் நிரம்பிய பிறகு அருகே உள்ள தென்னமநல்லூர், புளியங்குளம் கண்மாய்க்கு நீரோடை வழியாக செல்லும். இவ்வூர்க்கு நீரை பணிக்கர் என்ற இனக்குழுவினர் சரிபாதியாக பிரித்து கொடுக்கப்பட்டது  என்பதை இக்கல்வெட்டு மூலம் அறியலாம். தற்போது கண்மாய் இருந்து கலிங்கு வழியாக மறுகால் பாய்ந்தாலும் ஒரே மாதிரியான நீர் வெளியேறும் கட்டுமானம் அமைந்து இருப்பது மற்றொரு சிறப்பு என்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண