மேலூர் பகுதியில் டங்ஸ்டன்

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி,சண்முகநாதபுரம், எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கரை ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனம் (Hindustan Zinc) டங்ஸ்டன் (Tungsten) கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் எடுத்திருந்தது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யும்வரை  தொடர் போராட்டம் செய்யப் போவதாக அரிட்டாபட்டி  மக்கள் முடிவெடுத்து கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
 
 

மலை பகுதியில் அமர்ந்து போராட்டம்

 
தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான இப்பகுதியை அழிக்கும் வகையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைத்து ஏலம் விட முயற்சிக்கும் மத்திய அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த கிராம சபை கூட்டத்தில் மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சட்டசபை கூட்டத்தில் தமிழக அரசு டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தனர். இத்திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்க உள்ளோம் என, அரிட்டாபட்டி கிராம மக்கள் அங்குள்ள மலை பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
 

திருப்பத்தை ஏற்படுத்திய தமுக்கம் போராட்டம்

இந்நிலையில் மக்கள் போராட்டம் பெரியளவில் வெடிக்க ஆரம்பித்தது. மத்திய அரசுக்கு கீழ் செயல்படும் தமுக்கம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டமாக மாறியது. அதனால் தமுக்கம் திக்குமுக்காடியது. இந்நிலையில் இதனைத் தொடர்ந்து பா.ஜ.க.., மாநிலத் தலைவர் அண்ணாமலை அரிட்டாபட்டி, வல்லாளபட்டி கிராமத்திற்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் பேசினார். அப்போது நிம்மதியாக பொங்கல் கொண்டாடுங்கல் கண்டிப்பாக நல்ல செய்திவரும் டெல்லிக்கு விவசாயிகளை அழைத்துச் செல்கிறோம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசு டாங்ஸ்டன்ட் திட்டம் ரத்து செய்யப்படும் என அறிவித்தது. இதைத், தொடர்ந்து அ. வெல்லாளப்பட்டி, அரிட்டாப்பட்டி, தெற்குதெரு  உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கும்மியடித்து, கொண்டாடி வருகின்றனர்.
 

மக்கள் போராட்டம் வென்றது

 
மேலும் இந்த டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போராட்ட குழுவில் இருந்துவரும் சமூக ஆர்வலர் கம்பூர் செல்வராஜிடம் பேசியபோது அவர் கூறுகையில், “டங்ஸ்டன் திட்டம் கொண்டுவரப்படாது என, மத்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தீர்மானம் கொண்டுவந்த தமிழ்நாடு அரசுக்கு, திட்டத்திற்கு தடை விதித்த மத்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். முக்கியமாக போராட்டத்திற்கு வந்த கிராம மக்களுக்கும் நன்றி. மக்களின் போராட்ட சக்திக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன்” என தெரிவித்தார்.