வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பிரமாண்டமான கூட்டணி அமையும் என்றும் அந்த ஆட்சி வேறு விதமாக இருக்கும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. கட்சியின் அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர்.


அதிமுக தலைமையில் பிரமாண்டமான கூட்டணி:


2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும், அதற்கு தயாராவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது,  எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என நிர்வாகிகள் சூளுரைத்தனர். பின்னர் பேசிய அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரமாண்டமான கூட்டணி அமையும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "வரும் 2026ஆம் ஆண்டு, மக்கள் விரோத ஆட்சியை அகற்ற சூளுரைக்க வேண்டும். இப்படித்தான் நாடாளுமன்ற தேர்தலிலும் சொன்னார்கள் என்று பல பேர் நினைக்கக்கூடும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் வேறு சட்டமன்றத் தேர்தல் வேறு.


மக்கள் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும். 2026-ல் ஆட்சியைப் பிடிப்போம். 2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக இருக்கும்" என்றார்.


அதிரடி காட்டும் இபிஎஸ்:


தொடர்ந்து, திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த எடப்பாடி பழனிசாமி, "கருணாநிதி காலத்தில் அமைச்சராக இருந்தவர்கள் ஸ்டாலின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் துணை முதலமைச்சர் பதவி கிடையாது.


கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்தினால் அவரை எம்.எல்.ஏ ஆக்கினார்கள். பிறகு அமைச்சராக்கினார்கள். இப்போது துணை முதலமைச்சர் ஆக்கியிருக்கிறார்கள். கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் இவ்வளவு பதவிகளும் கிடைக்கும் என்ற நிலைமைக்கு தி.மு.க வந்துவிட்டது.


குடும்ப உறுப்பினர்கள்தான் அங்கு ஆட்சி அதிகாரம் செலுத்த முடியும், அப்படிப்பட்டவர்கள் 2026-ல் மக்களால் மாற்றிக் காட்டப்படுவார்கள்" என்றார்.


இதையும் படிக்க: TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?