நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்


மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத  வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் சிலர் மதுரை  பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான  வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலையுயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்குகள் பல மாதங்களாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நியோமேக்ஸ் மற்றும் அதன் 42 துணை நிறுவனங்கள் மீது பாதிக்கப்பட்ட முதலீட்டார்கள் நவம்பர் 15- ஆம் தேதிவரை புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 



 

 


பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


 


மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவந்த நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டார்களின் பணத்தை மோசடி செய்தததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதன் இயக்குநர்கள் கைதாகி ஜாமினில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுபடி நியோமேக்ஸ் மற்றும் அதன் 42 துணை நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

 

நவம்பர் -15ஆம் தேதி வரை நேரில் புகார் அளிக்கலாம்


பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்களது பெயர், முகவரி செல்போன் எண், ஆதார் எண், பாண்டுகளின் எண்ணிக்கை,  நிறுவனத்தின் பெயர்,  முதலீட்டுத் தொகை, முதலீடு செய்த வங்கி கணக்கு ஏஜென்ட்களின் விவரம் உள்ளிட்டவைகளை அடங்கிய விவரங்களுடன் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மதுரை மாநகர் தபால் தந்திநகர் பார்க்டவுண், சங்கரபாண்டியன் நகர் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நவம்பர் -15ஆம் தேதி வரை நேரில் புகார் அளிக்கலாம் எனவும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளனர்.