ஆடி மாத ஞாயிற்றுகிழமையை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்த சுமங்கலி பெண் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டது.
ஆடி மாதம் சாமி தரிசனம்
ஆடி தமிழ் மாதம் தெய்வங்களுக்கான மாதமாக கருதப்படுகிறது. ஆடிப் பிறப்பில் இருந்து ஆடி இறுதி வரை ஒவ்வொரு நாளும் தெய்வீகச் சடங்குகள் கோயில்களில் நடத்தப்படுகின்றன. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கான கொடைத் திருவிழாக்கள் தொடங்குகின்றன. புகழ்பெற்ற பல்வேறு கோயில்களுக்கு பக்தர்கள் ஆன்மிக பயணம் மேற்கொள்வர். இந்நிலையில் உலகபுகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் தினமும் ஆயிரக்கணான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு
ஆடி மாதம் முழுவதும் ஒவ்வொரு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பெரியபாளையம் பவானியம்மன் கோயில், சென்னை காளிகாம்பாள் கமடேசுவரர் கோயில் ஆகிய 5 கோயில்களில் சுமங்கலி பெண் பக்தர்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
மங்கலப் பொருட்களை வழங்கினார்
அதன்படி ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு வருகை புரிந்த சுமங்கலி பெண்களுக்கு மங்கலப் பொருட்களை கோயில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் மங்கலபொருட்களை வழங்கி துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன், அறங்காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.