மதுரையில் மாணாக்கர்களை குறிவைத்து விற்பனை செய்வதற்காக  மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.

 

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலில் விசாரணை

 

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கூல் லிப் மற்றும் கணேஷ்,  விமல் போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்பட்டு வருவதாக மதுரை மாநகர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின்படி மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மதுரை புதூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சிப்காட் பகுதியில் புதூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் சந்தேகத்துக்குரிய வகையில் சென்றுகொண்டிருந்த மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டியன் மற்றும்  S.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் ஆகிய இருவரையும்  காவல்துறையினர் நிறுத்தி விசாரணை செய்தனர்.

 


 

சில்லரை விற்பனை

 

அப்போது பைக்கில் வைத்திருந்த சாக்கு மூட்டை குறித்து விசாரணை நடத்திய போது மளிகை பொருட்கள் என கூறிய நிலையில் சாக்கு முட்டையை அவிழ்த்து சோதனையிட்டதில் அதில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இருவரிடமும் நடத்திய விசாரணையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்வதற்காக 200 கிலோ கூல்லிப்,  கணேஷ்,  விமல் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து சில்லறையாக விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 200 கிலோ கூல் லிப் , கணேஷ், விமல் உள்ளிட்ட புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக்கையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜபாண்டி மீது ஏற்கனவே பல்வேறு குட்கா பதுக்கல் மற்றும் விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது 

 



காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்



 

மதுரையில் பள்ளி கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்வதற்காக பதுக்கிவைத்திருந்த 200 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த புதூர் காவல்நிலைய காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டுகளை தெரிவித்தார். மதுரை மாநகர் பகுதிகளில் கூல் லிப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.