மதுரையில் வீட்டில் 23 கிலோ கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி அதிரடி தீர்ப்பு.

 

கஞ்சா விற்பனைக்கு எதிராக நீதிபதி அதிரடி

 

மதுரை மாநகர் மற்றும் கிராம பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கஞ்சா விற்பனை அமோகமாக இருக்கிறது. கஞ்சா விற்பனையால் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த, கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் அவரது நெருங்கிய உறவினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கஞ்சா விற்பனை செய்த நபருக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் கஞ்சா விற்பனையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா விற்பனை செய்தால் நமக்கும் இதே கதி தான் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீதிபதியின் இந்த அதிரடி தீர்ப்பை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

 

மதுரையில் சூடு பறக்க கஞ்சா விற்பனை

 

கடந்த 2011-ம் ஆண்டு, மதுரை மாநகர் செல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, தத்தனேரி காமாட்சி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை சூடுபறக்க நடைபெறுவதாக தகவல் கசிந்தது. இதையடுத்து காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காமாட்சிநகர் பகுதியில் வீடு ஒன்றில் 23 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்துவந்த அருள்தாசபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்ற நாய்போடு கணேசன் என்பவரை செல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 


 

நீதிமன்றத்தில் இறுதி விசாரணை 

 

இது தொடர்பாக போதைப் பொருள் கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கானது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் மதுரை மாவட்ட முதலாவது போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஹரிஹரகுமார் முன்பாக இறுதி விசாரணை நடைபெற்றது.  அப்போது  குற்றவாளி மீதான குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில் கணேசன் என்ற நாய் போடு கணேசனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இதனையடுத்து கணேசன் காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

கஞ்சாவை கட்டுப்படுத்த கோரிக்கை

 

இது குறித்து மதுரை சமூக ஆர்வலர்கள் கூறுகையில்...,” தொடர்ந்து இது போல் காவல்துறையினர் போதைப் பொருட்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கஞ்சா போன்ற சட்ட விரோத பொருட்கள் விற்பனைக்கு குட்டு வைக்க வேண்டும், அப்போது தான் பல்வேறு சமூக பிரச்னைகளை கட்டுப்படுத்த முடியும் என கேட்டுக்கொண்டனர்.