மாநகராட்சியில் முறைகேடாக பாஸ்வேர்டு பயன்படுத்தல்  

மதுரை மாநகராட்சி ஆணையாளராக தினேஷ்குமார் பணியாற்றியபோது, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டடங்கள் நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான வரி வசூல் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. 2022-2023-ஆம் ஆண்டுகளில் ரூ.150 கோடி வரை வரி வசூலில் முறைகேடு செய்து, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்த வரி முறைகேடு முழுவதும் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி, வரி குறைப்பு செய்தது ஆய்வில் தெரிய வந்தது. இந்நிலையில் இதுகுறித்து சைபர் கிரைம் காவல் துறையினருக்கு ஆணையாளர் தினேஷ்குமார் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து இந்த புகாரின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வரி குறைப்பு செய்வதற்காக அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது.

சுற்றும் விசாரணை வளையம்

இதுகுறித்து தற்போதைய மாநகராட்சி ஆணையர் உமா விஜயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த புகாரினை தீவிரமாக விசாரணை நடத்தி, முறைகேடுகளை வெளிக்கொண்டு வர வேண்டுமென கூறிய நிலையில் வழக்கானது மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. அதன்படி வரி முறைகேடு தொடர்பாக மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன், ஒப்பந்த ஊழியர்கள் தனசேகரன், சதீஷ், கார்த்திகேயன், இடைத்தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ்குமார், முகமது நூர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த முறைகேடு எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்களான வாசுகி, சரவண புவனேசுவரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.
 
மேயர் கணவர் கைது  
 
இந்தநிலையில் கடந்த வாரம் மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மாநகராட்சி வரிவிதிப்புகுழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையில் இருந்த மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவரான பொன்வசந்தும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
 
மருத்துவமனையில் சிகிச்சை - நீதிமன்ற காவல்
 
இந்நிலையில் பொன்வசந்த் தலைசுற்றல், ரத்த அழுத்தம், பிரச்னையால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.எம்.சி.யு.,) அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மதுரை முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆனந்த் நேற்று இரவு மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார். பொன் வசந்த் வரும் 26-ஆம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
 
மேயர் பதவிக்கு வேட்டு?
 
மதுரை மாநகராட்சி முறைகேடு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தன்னை மேயர் பதவிக்கு கொண்டுவர உதவிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகரஜனிடம் மேயர் இந்திராணி முறையிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக 2 மணி நேரம் காத்திருந்து பின் சந்தித்து பேசியதாகவும், ஆனால் பேச்சை குறைத்துக் கொண்ட அமைச்சர், ”எதுவாக இருந்தாலும் சட்டப்படி பார்த்துக் கொள்ளுங்கள்” என சுருக்கமாக முடித்துக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அமைச்சர் நிழலில் இருந்த பொன்வசந்த் அவரின் ஆதரவை பெற்று தனது மனைவியை மேயராக உருவாக்கினார். இந்த விஸ்வாசத்திற்காக மதுரையில் உள்ள அமைச்சர் நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டார் மேயர் இந்திராணி. இந்த சூழலில் மதுரை மாநகராட்சி விவகாரம் முதலமைச்சர் மற்றும் நீதிமன்றம் வரை சென்றதால் இதில் அமைச்சர் முனைப்பு காட்டவில்லை என சொல்லப்படுகிறது. எனவே மேயர் கணவர் கைது நடவடிக்கை நடந்த சூழலில், மேயரின் பதவி நீடிக்குமா என கேள்வி எழுந்துள்ளது.