கழிவறையை சுத்தம் செய்வதில் ஆயிரம் கோடி ஊழல், மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி ஊழல் என துருப்பிடித்து தகரமாக உள்ள திமுக ஆட்சிக்கு விளம்பரத்தால் பாலிஷ் போட நினைக்கிறார் ஸ்டாலின் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
மக்களை காக்கின்ற கப்பலாக இருக்கும் பஸ் - ஆர்.பி.உதயகுமார்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்..,” இன்றைக்கு ஸ்டாலின் திமுக அரசின் நிர்வாக தோல்வியால், எல்லா வகையிலும் தமிழ்நாட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு இன்மை, மின் கட்டண உயர்வு என்பதை தனது வெற்றி பயணத்தின் மூலம் தோலுரித்துக் காட்டி வருகிறார், அதிமுக பொதுச்செயலாளர். செல்லும் இடமெல்லாம் கடல் அலைகளைப் போல மக்கள் வெள்ளம் திரண்டு நிற்பது, இன்றைக்கு தத்தளித்து கொண்டிருக்கும் மக்களை காக்கின்ற கப்பலாக இருக்கிறது, பச்சை கலர் பஸ். இது மக்களைக் காக்கின்ற பஸ். இந்த பச்சை பஸ் எட்டு கோடி தமிழ் மக்களின் நம்பிக்கையாக உள்ளது. எடப்பாடியார் வெற்றிப் பயணம் தமிழகம் முழுவதும் மட்டுமல்ல இந்தியா முழுவதும் விவாதமாக வந்து கொண்டிருக்கிறது.
எல்லா மாநகராட்சிகளிலும் ஊழல்
மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம், சென்னை, எல்லா மாநகராட்சிகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது. எல்லா நகராட்சிகளிலும் ஊழல் நடக்கிறது. திமுக எங்கே இருக்கிறதோ அங்கே ஊழல் இருக்கிறது என்கிற அவர்களுடைய குணத்தை மீண்டும் இங்கே நிரூபித்திருக்கிறார். திமுக என்றால் ஊழல், ஊழல். இதுதான் திமுகவை பற்றி தமிழகம் கண்ட வரலாறு. அந்த வரலாறை மீண்டும் இன்றைக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். இன்றைக்கு கழிவறை சுத்தம் செய்வதில் ஆயிரம் கோடி ஊழல், திமுக அரசின் பணவெறிக்கு முடிவு கட்டும் காலம் வந்துவிட்டது. பிணவறைக்கு செல்லும் இந்த திமுக ஆட்சிக்கு மக்கள் போஸ்ட்மாட்டம் செய்ய தயாராகி விட்டார்கள்.
மதுரை மாநகராட்சி ஊழல் என இன்றைக்கு திமுக அரசு துருப்பிடித்த தகரமாக உள்ளது
அதனால் தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் இனி நான் தூங்க மாட்டேன், உங்களையும் தூங்க விடமாட்டேன் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுரை சொல்லி இருப்பதாக செய்தி வருகிறது என்று சொன்னால் என்ன காரணம் கட்சியும், ஆட்சியும் பலவீனமாக இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆயிரம் கோடியில் கழிவறையில் சுத்தம் செய்வதில் ஊழல், ரூ.150 கோடியில் மதுரை மாநகராட்சி ஊழல் என இன்றைக்கு திமுக அரசு துருப்பிடித்த தகரமாக உள்ளது. துருப்பிடித்த தகரமாக காட்சியளிக்கும் திமுக அரசுக்கு பாலிஷ் போடுவதற்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
மருத்துவமனைக்கு சென்றால் கிட்னியை காணோம்
திமுகவினர் நடத்தும் மருத்துவமனைக்கு யாரும் செல்ல முடியாது. ஏனென்றால், ஒரு சட்டமன்ற உறுப்பினரே அப்பா கார் வாங்க வேண்டும் என்றால் கிட்னியைதான் திருட வேண்டும் என்று கூறுகிறார். சட்னியை திருடுவது போல கிட்னியை திருடுவது போல் கூறுகிறார். அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்டைக் காணோம், வீட்டில் உள்ள தங்கத்தை காணோம், என்பது போல இன்றைக்கு திமுக நடத்தும் மருத்துவமனைக்கு சென்றால் கிட்னியை காணோம், என்று நிலையைத்தான் பார்க்க முடிகிறது” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.