கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவே வெளிநாடு போயிருக்கிறார். - ஸ்டாலின் மீது இபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு.
மதுரையில் ஈபிஎஸ் சுற்றுப்பயணம்
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் பேசினார்..,” மதுரை மேற்கு தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை. இந்த தொகுதியில் உங்களின் எழுச்சியே அடுத்தாண்டு தேர்தலில் இங்கு அதிமுக வெல்லும் என்பதற்கான சாட்சி. கடந்த தேர்தலில் மதுரை மாவட்டத்தில் ஒருசில தொகுதிகளில் திமுக சூழ்ச்சி செய்து வென்றுள்ளது. ஆனால் அடுத்தாண்டு தேர்தலில் மதுரையின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும்.
ஊழல் முழுமையாக விசாரிக்கப்படும்
எல்லா துறைகளிலும் ஊழல் என்பதற்கு மதுரை மாநகராட்சியே ஒரு உதாரணம். நீங்கள் செலுத்தும் வரியெல்லாம் தனி நபருக்குச் செல்கிறது, திமுகவினருக்குச் செல்கிறது. மதுரை மாநகராட்சியில் ஆளுங்கட்சி மேயர் முறைகேடு 200 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக செய்தி வந்தது. இந்த அரசே விசாரித்து மண்டல குழு தலைவர்கள் 5 பேர் ராஜினாமா செய்துள்ளனர். வரிக்குழு, நகரமைப்பு குழு தலைவர் ராஜினாமா செய்துள்ளனர், அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேயரை கைது செய்யவில்லை, அவரது கணவரை மட்டும் கைது செய்தனர். இதற்கு யார் பொறுப்பு? மேயர் தானே, அவரை கைது செய்யவில்லை. அவரது கணவரையும் சாதாரண செக்ஷன்களில் கைதுசெய்து திமுக கண் துடைப்பு நாடகம் நடத்துகிறது. அடுத்தாண்டு அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த ஊழல் முழுமையாக விசாரிக்கப்பட்டு, மக்களின் வரிப்பணம் ஒரு ரூபாய் கூட வீணாகாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊழல் தொடர்கிறது
மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றத்தான் வரி போடுகிறார்கள். அந்த வரி வசூல் பணத்தை இவர்கள் கொள்ளையடிக்கிறார்கள். பின்னர் மாநகராட்சிக்கு பணம் தேவை என்பதால் 260 கோடி ரூபாய் கடன் வாங்குகிறார்கள். இந்த கடனை யார் கட்டுவது? அதற்கும் வரி போடுவார்கள். இதுதான் ஊழல் அரசு என்பதற்கு சான்று. இங்கு மட்டுமல்ல கோவையிலும் மேயரை மாற்றிவிட்டனர், காஞ்சிபுரத்திலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம், நெல்லையிலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தனர். எல்லாம் பங்கு பிரிப்பதில் பிரச்னை. அதனால்தான் இப்படிப்பட்ட நிகழ்வு நடக்கிறது. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசாங்கம் தான். அன்று முதல் இன்று வரை ஊழல் தொடர்கிறது. 2026 தேர்தல் ஊழல் அரசுக்கு முடிவுகட்டும் தேர்தலாக இருக்க வேண்டும்.
10 ரூபாய் ஊழல்
டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி, மாதத்துக்கு 450 கோடி, வருடத்துக்கு 5400 கோடி என்று, இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். கூடுதலாக பெறும் தொகை முழுக்க மேலிடம் செல்வதாக தகவல். வெட்டவெளிச்சமாக 10 ரூபாய் அதிகம் வசூலிப்பது எல்லோருக்கும் தெரியும். இதற்குப் பின்னே இவ்வளவு பெரிய மெகா ஊழல் நடந்துள்ளது.” எனவும் குறிப்பிட்டு பேசினார்.