மதுரை மாவட்டம் அழகர்கோயில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கிய நிலையில் 3 ஆவது நாளாக நேற்று மாலை மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியான் பல்லக்கில் புறப்பாடாகி திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடத்தபட்ட பின்  சுந்தராஜபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் அழகர் மலையில் இருந்து மதுரையை நோக்கி புறப்பாடாகினார்.








 

கோட்டை வாசலிலில் வெளியேறிய கள்ளழகர் 18ஆம் படி கருப்பணசாமி கோவில்  முன்பாக எழுந்தருளிய பின்னர் பூஜை செய்யப்பட்டு பின்னர் புறப்பாடாகினார். இதனை தொடர்ந்து வழி நெடுகிலும் உள்ள பொய்கைகரைபட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி உள்ளிட்ட பல்வேறு மண்டகபடிகளில் எழுந்தருளிய பின்பாக இன்று அதிகாலையில் மதுரை மாநகர் பகுதியான மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெற்றது. 





தொடர்ந்து மதுரை மாநகரில் உள்ள பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி நள்ளிரவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்று ஆயிரம்பொன் சப்பரத்தில் காட்சியளிப்பார். பின்னர் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகி நாளை 16 ஆம் தேதி அதிகாலை 5.50 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் வீர ராகவ பெருமாள் வரவேற்க கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருள உள்ளார்.



 


 

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும்,  17ஆம் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து தசாவதாரம், பூப்பல்லக்கு, மலைக்கு திரும்புதல் போன்ற நிகழ்வுடன் கள்ளழகர் சித்திரை திருவிழா வரும் 21ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. கள்ளழகர் எதிர்சேவையின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்திகோஷங்கள் எழுப்பியபடி கள்ளழகரை வரவேற்றனர்.