மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்ற சித்திரை திருவிழாவானது இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதியுடன் நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை பட்டாபிஷேகமும், 14ஆம் மினாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், 15ஆம் தேதி தேரோட்டமும், 16ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் 7ஆம் நாளான இன்று சிவபெருமானின் பிரசித்தி பெற்ற அவதாரங்களில் ஒன்றான பிச்சாண்டவர், நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்தார். இதில் எளிமையான மரசட்ட சப்பரத்தில் பட்டு வேஷ்டி உடுத்தி நீல நிற தலைப்பாகை அணிந்தபடி மலர் அலங்காரத்தில் பிச்சாண்டவர் எனும் கங்காளநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ‘நான்’ என்ற அகந்தை எண்ணத்தை உண்டாக்கும் ஆணவத்தை நம்மிடம் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரம் என சொல்லப்படுகிறது.
பிச்சாண்டவர் வீதியில் வலம் வரும்போது நம்மிடம் இருக்கும் ஆணவத்தையும் கர்வத்தையும் அவருக்கு பிச்சையாக வழங்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இன்று மாலை சிறப்பு நந்திகேஸ்வரர் வாகனத்தில் சொக்கநாதரும் பிரியாவிடையும் எழுந்தருளுவதோடு மீனாட்சியம்மன் தனி யாழி வாகனத்தில் எழுந்தருள உள்ளனர். அதை தொடர்ந்து 4 மாசி வீதிகளில் வலம் வரும் அம்மனையும், சாமியையும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய உள்ளனர்.
அதே போல் மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா, வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்கான தங்ககுதிரை வாகனம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை மாவட்டம் அழகர்கோயில் அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா நாளை தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக 14ஆம் தேதி கள்ளழகர் புறப்பாடும், 15ஆம் தேதி எதிர்சேவையும், 16 ஆம் அதிகாலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் தங்க குதிரையில் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வும், 17ஆம் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இந்நிலையில் கள்ளழகர் திருக்கோயிலில் இருந்து தங்க குதிரை வாகனம் , சேஷ வாகனம் மற்றும் கருட வாகனம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.
கள்ளழகர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்தபடி தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளும் தங்க குதிரை வாகனமானது மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின் இறக்கி வைக்கப்பட்டது. இதேபோன்று கருட மற்றும் சேஷ வாகனம் வண்டியூர், தேனூர் மண்டகப்படியில் வைக்கப்பட்டது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -Track Alagar: சித்திரைத் திருவிழா: கள்ளழகர் இருக்கும் இடத்தை தெரிந்துகொள்ள “மதுரை காவலன்” செயலி!