சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி
மதுரைச் செல்லூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் "சீர்மரபு பழங்குடி சமூகங்களின் கூட்டமைப்பு சார்பாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குரிய 20% இடஒதுக்கீட்டினை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமல்படுத்தவும், உடனடியாக தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவும், தமிழ்நாட்டில் 2000 முதல் 2021ம் ஆண்டு வரை அனைத்து சாதியினரும் அடைந்த கல்வி மற்றும் அரசுப் பணிகள் குறித்த வெள்ளையறிக்கை வெளியிடவும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் ஏப்ரல் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தோம். ஆனால் அதிகாரிகள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை.எனவே, 2022 ஏப்ரல் 10 தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு அவசர வழக்காக நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில்,மதுரை மாநகரில் சித்திரைப் பெருவிழாவினை முன்னிட்டு காவலர்கள் பற்றாக்குறை உள்ளதால் போதிய பாதுகாப்பு வழங்க இயலாது.பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யாமல், ஒலிப் பெருக்கியின் சத்தம் அதிகம் இல்லாமல், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தால் அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதி, மதுரை மாநகர காவல் ஆணையர், சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். உண்ணாவிரதப் போராட்டம் 2022 ஏப்ரல் 10-ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்பட்டு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.