மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை இறுதிப்போட்டியின் நடுவே இரு அணியினரும் ஒருவொருக்கொருவர்  மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி

 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் கடந்த 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது.  இதில்  தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த 456 வீரர்கள் மற்றும் 456 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கில்  நடைபெற்ற இறுதி போட்டியினை, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா  நிறைவு போட்டியினை தொடங்கிவைத்தார். இறுதி போட்டியில் கோவை - சென்னை அணிகள் இடையே போட்டி நடைபெற்றுகொண்டிருந்தபோது நடுவர்கள் ஒருதலைபட்சமாக சென்னை அணிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி தொடர்ந்து கோவை அணியினர் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவித்தனர் . இதனையடுத்து போட்டி நடைபெறும் இடத்திற்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்புடன் போட்டி நடைபெற்றது.

 

போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது

 

இதனையடுத்து இறுதி போட்டியின் கடைசி 40நொடிகளில் விளையாடி கொண்டிருந்தபோது இரு அணி வீரர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சிறிய  அளவிலான மோதலாக மாறியது இதனையடுத்து காவல்துறை இரு தரப்பையும் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இறுதிபோட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை தங்கப்பதக்கமும், கோயம்புத்தூர் வெள்ளிப்பதக்கமும், ஈரோடு வெண்கலப்பதக்கமும் அறிவிக்கப்பட்டது. இதேபோன்று பெண்கள் பிரிவில் சிவகங்கை தங்கப்பதக்கமும், கிருஷ்ணகிரி வெள்ளிப்பதக்கமும், கன்னியாகுமரி வெண்கலப்பதக்கமும்  வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 

போட்டியில் குளறுபடி

 

இதை தொடர்ந்து ஆண்கள் பிரிவினருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் பரிசுகளை வழங்கிசென்றனர். அப்போது முதல் இடத்தை பிடித்த சென்னை அணியினர் பரிசுகளை பெற்றபோது, கோயம்பத்தூர் மகளிர் அணியைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் திடீரென உண்மையான வெற்றியாளர்கள் கோயம்பத்தூர் அணியினர் என முழக்கங்களை எழுப்பியதோடு திடீரென நயன்தாரா என தொடர்பே இல்லாமல் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு விழாவில் இதுபோன்று குளறுபடி ஏற்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 



அதிகாரிகளிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.



 

வீராங்கனை ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் அவரை தூக்கி செல்வதற்கான ஸ்ட்ரக்சர் வசதி இல்லாத நிலையில் அங்கிருந்த சக வீராங்கனைகளே கடும் சிரமத்தோடு மயங்கி விழுந்த வீராங்கனை தூக்கி சென்று முதற்கட்ட சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர். மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான இறுதி போட்டியில் இது போன்று அவசர உதவிக்கான ஸ்ட்ரக்சர் உள்ளிட்ட ஏற்பாடுகள் கூட முறையாக செய்யவில்லை என கோச்சர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அதிகாரிகளிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

 

அதிகாரிகள் விளக்கம்

 






வீரர்கள் மோதல் தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரியிடம் விளக்கம் கேட்டபோது கோயம்புத்தூர் அணியினர்  போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விதியை மீறி உள்ளே வந்ததால் அவர்கள் டிக்லைன் செய்யப்பட்டதாகவும், மேலும் கோயம்புத்தூர் அணியினர் தொடர்ச்சியாக இதுபோன்று செய்து வருவதாக தகவல் வந்துள்ளது. கோவை அணியினர் அளித்த குற்றச்சாட்டு தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளோம். விளக்கம் தரும் பட்சத்தில் அவர்களுடைய குற்றச்சாட்டு உண்மையான விசாரணை நடத்துவோம் என்றார்.