தென்மண்டலத்தில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனைக்கு எதிராக நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுகிறது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை காவல்துறையினர் தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.  கைது நடவடிக்கை, போதை வஸ்துகள் பறிமுதல் என்பதோடு அல்லாமல், நடவடிக்கையின் தீவிரத்தை அதிகப்படுத்தும் விதமாக, கடந்த 2022-ம் ஆண்டில் 13 கஞ்சா வழக்குகளில் நிதி விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அவ்வழக்குகளின் குற்றவாளிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் ரூபாய் 12 அரைகோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் அவற்றோடு அவர்களின் அசையா சொத்துக்களையும் முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


 

அதே போல், மதுரை மாவட்ட காவல்துறையினரால் தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், மணல் திருட்டு, நில அபகரிப்பு, போதைப்பொருள் கடத்தல் பாலியல் குற்றம் மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை கிடைக்கும் வகையில் செயல்படுவதாக தென் மண்டல காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். போக்ஸோ வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் இதற்கு முன்னதாகவே சட்டப்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதாக தெரிவிக்கின்றனர்.



 

மேலும் இதுகுறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் கூறுகையில், "பாதிக்கப்பட்ட நபர்களுக்கு விரைந்து நீதி கிடைக்கவேண்டும் என விரைவாக செயல்பட்டு வருகிறோம். அவர்களின் தொடர்பான வழக்கு குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுகிறது. போக்ஸோ வழக்கில் நிலையை கணக்கிட மூன்று வண்ணங்களில் அதன் குறிப்புகளை சேமிக்கிறோம். குற்றப்பத்திரிக்கை 45 நாட்கள் வரை தாக்கல் செய்யப்படாமல் இருந்தால் பச்சை நிற குறிப்புகளில் இருக்கும். 46 முதல் 50 நாள்வரை மஞ்சள் நிற குறிப்பில் இருக்கும். அதுவே 51-வது நாள் ஆகிவிட்டால் உடனடியாக சிவப்பு நிற குறிப்பில் சேர்ந்துவிடும் இதனால் உடனடியாக அந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட ஏற்பாடுகள் எடுக்கப்படும். இப்படி பல்வேறு முறைகளில் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்க முயற்சிக்கிறோம்” என்றார்.

 

59 நாட்களுக்குள் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதால் சமீபத்தில் 202 வழக்குகள் போஸ்கோ வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.



 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண