மதுரை மத்திய சிறை அங்காடியில் தீபாவளி இனிப்பு வகைகள் விற்பனையை துவக்கி வைத்த சிறை நிர்வாகம். தீபாவளியை முன்னிட்டு இரவு 10 மணி வரையில் சிறை அங்காடி இயங்கும் என அறிவிப்பு.


தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மதுரையில் தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது. மதுரை முக்கிய கடை வீதிகளான விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி, பத்துத்தூண், மஞ்சனக்காரத்தெரு, கீழவெளி வீதி, காமராஜர் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகைக்கான புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்களை வாங்க காலை முதல்  ஆர்வமுடன் வருகை தர தொடங்கியுள்ளனர். 

 





 

மேலும், கடைகளை தவிர சாலையோர கடைகளிலும் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு பொருட்களை மக்கள் வாங்கி செல்கிறார்கள். விடுமுறை நாட்களை போல் வேலை நாட்களிலும்  மதுரை மாவட்டம் மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து பொருட்களை வாங்கிசெல்கின்றனர். ஆடைகளின் விலை கடந்த ஆண்டை விட இந்தாண்டில் அதிகரித்து உள்ள நிலையிலும் விற்பனை அதிகரித்துள்ளது. அதே போல்  மதுரை மத்திய சிறை அங்காடியில் தீபாவளி இனிப்பு வகைகள் விற்பனையையும் துவங்கி சூடு பிடித்துள்ளது.




மதுரை அரசரடி பகுதியில் இயங்கி வரும் சிறை அங்காடியில் தீபாவளி இனிப்புகள் மற்றும் காரங்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பை மதுரை மத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி அவர்கள் விற்பனைக்கு துவக்கி வைத்தார. தொடர்ந்து இனிப்பு வகைகள் அடங்கிய தொகுப்பானது பொதுமக்கள் எளிதில் வாங்கும் வண்ணம் ரூபாய் 449க்கு ஒன்பது வகையான இனிப்பு மற்றும் கார வகைகள் அடங்கிய பிளாஸ்டிக் டப்பா உடன் கூடிய தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார். காலை 6 மணி முதல் மாலை 6:00 மணி வரை இயங்கி வந்த சிறை அங்காடி இன்று முதல்  இரவு 10 மணி வரை இயங்கும் எனவும், காலை உணவு பிற்பகல் உணவு உட்பட பிற கார வகைகள் மற்றும் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்,




இரவு 10 மணி வரை விற்பனை செய்யப்படுவதால் விற்பனையும் கூடும் என்றும் பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். தமிழக சிறைத் துறையில் மதுரை மத்திய சிறைச்சாலையில் முதல் முறையாக ரூபாய் 499 தீபாவளி சிறப்பு விற்பனையை அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் இனிப்பு வகைகள் ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கும் விற்பனையானது செய்யப்படும் என மத்திய சிறைத்துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.