மதுரையில் மாணவிகளுக்கான சீருடை தைக்க ஆண் டெய்லர்களை பயன்படுத்தி கட்டாயப்படுத்தி அளவெடுக்க வைத்ததாக 10 ஆம் வகுப்பு மாணவி அளித்த புகாரில் ஆசிரியை மற்றும் 2 டெய்லர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் கைது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை மற்றும் டெய்லர்கள் மீது போக்சோ 

 
மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட எம்.கே.புரம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவிகளுக்கான சீருடை தைப்பதற்காக ஆண் டெய்லரை பயன்படுத்தி 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அளவு எடுக்க வைத்ததாக மாணவி அளித்த புகாரின் கீழ் அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியை மற்றும் டெய்லர்கள் மீது மதுரை நகர் அனைத்து மகளிர் காவல்துறை சார்பில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 

பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

 
இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆசிரியை மற்றும் டெய்லரை கைது செய்ய வேண்டும், இனி ஆண் டெய்லர்கள் மாணவிகளுக்கு சீருடை அளவீடு செய்யும் பணிக்கு பயன்படுத்த கூடாது என கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

 
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரையில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கான சீருடை தைப்பதற்காக ஆண் டெய்லரை பயன்படுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.