இந்துக்கள் தொடர்பான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் கருத்துக்கு மிரட்டும் வகையில் பதில் அளித்த விவகாரத்தில், பாஜகவின் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரனை வழக்கு நிலுவையில் இருக்கும் வரை கைது செய்ய வேண்டாமென மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரனிடம், இந்து மக்கள் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் மிரட்டல் விடும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாகவும் பேசினார். இது தொடர்பாக, சுசீந்திரன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுசீந்திரன், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி நக்கீரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் வாய்ப்பிருப்பதால், அதுவரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
அரசுத்தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி, சுசீந்திரனை வழக்கு நிலுவையில் இருக்கும் வரை கைது செய்ய வேண்டாமென அறிவுறுத்தி வழக்கை அக்டோபர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மற்றொரு வழக்கு
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து எடுத்த வழக்கில், சட்டவிரோத குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய இறுதியாகஒரு வார கால அவகாசம் வழங்கி மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகள் நடத்தப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்த நிலையில், சட்டவிரோத குவாரிகளை நடத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தமிழகம் முழுவதிலும் சட்ட விரோத குவாரிகள் நடத்தப்படுவதை தடுப்பதும், குவாரிகள் நடத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதும் அவசியம். தெரிவித்த நீதிமன்றம் இது குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல செய்யப்படவில்லை. அதற்கு நீதிபதிகள், "சட்டவிரோத குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும், தற்பொழுது வரை ஏன் எவ்விதமான பதிலும் தெரிவிக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒருவாரம் கால அவகாசம் கோரப்பட்டது.இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் இறுதியாக ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.