ஆன்மீக குரு என கூறி ஆசிரமம் கட்டி தருவதாக ரூ.4.65 கோடி மோசடி வழக்கை ரத்து செய்ய முடியாது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை சேர்ந்த ரவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தன்மீது 4.65 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எனக்கு தொடர்பு இல்லை எனவே இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல் பணம் கொடுத்து ஏமாந்த ராமதாஸ் இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட போலீசாரிடம் இருந்து வேறு குற்றப் புலனாய்வு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் மனு தாக்கல் செய்துள்ள ரவி என்பவர் துபாயில் வசிக்கும் மருத்துவ தம்பதியரான ராமதாஸ் மற்றும் சுப்புராதேவி ஆகியோரிடம் தன்னை ஆன்மீக குரு என அறிமுகப்படுத்தி சிவகங்கையில் ஆசிரமம் கட்டலாம் என ஆசை வார்த்தை கூறி அவர்களிடமிருந்து வங்கி மூலமாக 4.65 கோடி ரூபாய் கடந்த 2018 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். ஆனால், பணத்தை பெற்ற பின்பு அவர்களை ஏமாற்றி தலைமறைவாகி விட்டனர். இதன் அடிப்படையில் புகார் பெறப்பட்டு ரவி உள்பட ஆறு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கு முழு விசாரணை முடித்து சிவகங்கை மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது என தெரிவித்தனர்.
இதனை பதிவு செய்த நீதிபதி முதல் தகவல் அறிக்கை மற்றும் போலீஸ் விசாரணையில் பண மோசடி நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டார். அதேபோல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை முடித்து குற்ற பத்திரிகை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளதால் விசாரணையை வேறு குற்றப்பிரிவு புலனாய்வு விசாரணைக்கு மாற்ற முடியாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
மற்றொரு வழக்கு
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகேயுள்ள முடிக்கரை கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள முடிக்கரையைச் சேர்ந்த ரவி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள முடிக்கரை கிராமத்தில் உள்ள அய்யனார் மற்றும் முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரையில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி மனு அளித்தும் இதுவரை அனுமதி அளிக்கவில்லை எனவே, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையில் தான் ஜல்லிகட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகளுக்கு அனுமதி வழங்க அரசாணை உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுதாரர் அரசை அணுகி உரிய நிவாரணம் தேடிக் கொள்ளலாம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்