மதுரை  அமெரிக்கன் கல்லூரியில் செயல்பட்டுவரும் நீர் வாழ் உயிர் வளர்ப்பு துறையில் மாணவர்களுக்கு மீன் வளத்துறை சார்பாக நாட்டு மீன் வளர்ப்பு ஆர்வலர் ரவிச்சந்திரன் நன்னீரில் மீன்கள்  வளர்ப்பது, வளர்ப்பு மீன்களை பிடிப்பது எப்படி என்பது பற்றிய அனுபவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.






இதனிடையே  மதுரை மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியில் உள்ள சின்ன காரி கண்மாய், பீக்கம் குளத்து கண்மாய் ஆகிய கண்மாய்களில் அரிவலை மூலமாக பாரம்பரியமாக மீன் பிடித்தல் முறையை பற்றி செயல்முறை வாயிலாக கற்றுக் கொடுக்கப்பட்டது.



 

25-க்கும்மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முன்னதாக குளத்துக்குள் இறங்கிய மாணவர்கள் தடுப்பு வலையை கட்டினா். அதனைத் தொடர்ந்து அரி வலையால் சுற்றி வளைத்து மீன்களை பிடித்தனர். அப்போது நன்னீரில் வளரும் விலாங்கு, கட்லா, ரோக், சிலேபி, உளுவை, பொட்லா, கெண்டைமீன், கெளுத்தி மீன் முதலான மீன்களை மாணவர்கள் மீன்பிடி பயிற்சியின்போது சிலேபி, பிடித்தனர். அதனை தொடர்ந்து தாங்கள் பிடித்து வந்த மீன்களை கண்மாயின் கரையின் அருகிலேயே வெட்டவெளியில் இயற்கை சூழலில், சுத்தம் செய்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து சமைத்து சாப்பிட்டனர்.



 

இந்த பயிற்சியின் போது கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் மீன்வளத்துறை ஒருங்கிணைப்பாளர், இயக்குநர் மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.





அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணாக்கர்கள் வலை கட்டி மீன் பிடிப்பதை சமூக வலைதளங்களில் மட்டுமே பார்த்து உள்ளதாகவும், குளம், கண்மாய்களில் தூண்டில் போட்டு மட்டுமே மீன்பிடித் உள்ளதாகவும் கூறினர். மேலும் தாங்களே வலை கட்டி மீன் பிடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் உற்சாகமாக இருந்ததாகவும் கூறினர்.